Sunday, August 30, 2015

இந்தியா - இலங்கை இடையே மீண்டும்கப்பல் போக்குவரத்து சாத்தியமாகுமா?

Sunday, August 30, 2015
சென்னை:இலங்கையில், ரணில் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளதால், 'இந்தியா - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும்' என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.தமிழகத்தின் ராமேஸ்வரம் - இலங்ைக தலைமன்னார் இடையே, பல ஆண்டுகளுக்கு முன்வரை, கப்பல் மூலம் வாணிபம் நடந்துள்ளது. இதனால், இருநாட்டு கலாசார பரிமாற்றம், உறவு சிறப்பாக இருந்தது.
 
துாத்துக்குடி - - கொழும்பு இடையே முதல் பயணிகள் கப்பலை இயக்கியவர் வ.உ.சிதம்பரனார். 1907-ம் ஆண்டு எம்.வீ. கலிலியோ, எம்.வி. லாவோ ஆகிய இரண்டு சுதேசி பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கினார். 104 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தூத்துக்குடி - -கொழும்பு இடையே 2011-ம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
 
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து 'ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற அதிநவீன சொகுசுப்பயணிகள் கப்பல் போக்குவரத்தை, அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் துவக்கி வைத்தார். அந்த கப்பல் சேவை குறுகிய கால அவகாசத்தில் துவங்கப்பட்டதால், முதல் கப்பலில் பயணிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலே சென்றனர்.
 
நாளடைவில், கொழும்பு - துாத்துக்குடி பயணிகள் கப்பல் போக்குவரத்தில், லாபம் கிடைக்காததாலும், உள்நாட்டு போரினாலும் நிறுத்தப்பட்டது.
 
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததோடு, இரு நாடுகளுக்கு இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க, மோடி அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது. எனவே, இந்தியா - இலங்கை இடையே விரைவில், பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சமீபத்தில், இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர்கள், பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையில் ரணில் தலைமையிலான அரசு புதிதாக அமைந்துள்ளதால், அண்டை நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில், புதிய திட்டங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
 
தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்தை அமைப்பதால், இந்தியா - இலங்கை உறவு வலுப்படுவதோடு, இலங்கையுடனான சீனாவின் நெருக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க ஏதுவாக இருக்கும்.-
DM

No comments:

Post a Comment