Thursday, June 18, 2015

மழை விட்டும் தூவானம் நின்று விடவில்லை!!

Thursday, June 18, 2015
மகிந்தவுடைய ஆட்சிக்காலத்தில் தமக்கு கேட்டவையெல்லாம் கிடைக்கவில்லை. பிரதம செயலாளரை மாற்றவில்லை. ஆளுநரை மாற்றவில்லை என வசை மாரி பொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினர் தற்சமயம் தமக்கு பிடித்தமான ஆளுநரையும் தமக்கு ஏற்ற பிரதம செயலாளரையும் வடமாகாணசபைக்கு நியமித்து ஆட்சி செய்து வருகின்றனர்.
சுமார் ஆறுமாதங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி செய்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே யார் பெரிது என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டதை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போது வடமாகாணசபைக்கு தெரியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிஅளித்தமை தொடர்பில் பிரஸ்தாபித்தது கோடிட்டு காட்டுகிறது.
 
மக்கள் பணிசெய்வதில் இவர்களிடையே போட்டியில்லை. வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபை உறுப்பினர்களும் வடமாகாண தமிழ் பேசும் மக்களினால் மக்கள் பணிசெய்வதற்காக தமது பொன்னான வாக்குகளை அளித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதனை போட்டியாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.
மகிந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களுக்கோ ஒன்றும் தரவில்லை என்று ஒப்பாரி வைத்தவர்கள் மைத்திரி அரசாங்கம் எனக்குத் தான் தரவேண்டும். உனக்குத் தரக்கூடாது என்ற கோதாவில் நிற்பது முழுத் தமிழ் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மகிந்த அரசாங்கத்துடன் நெருங்கமாக இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோடிக்கணக்கான ரூபாய்களை தாங்கள் சார்ந்த பிரதேச அபிவிருத்திக்காக செலவளித்ததனை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலொன்று வருகின்ற நிலையில் பல சவால்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அந்தக் கட்சியினர் எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுமிடையிலான அதிகார போட்டி, குறிப்பாக வடமாகாண சபையில் காணப்படுகின்ற குறைபாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே சட்டத்தரணிகளுடைய மேலாதிக்கம், வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை விமர்ச்சிக்கின்ற தன்மை ஆகியன இந்தக் கட்சியினுடைய எதிர்கால செயற்பாடுகளை ஒரு மந்த நிலைக்கு தள்ளியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எக்காலத்திலும் சவால் விடுகின்ற அளவிற்கு தனித்துவமாக காணப்படுகின்ற ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள், மைத்திரி அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலை, புலம்பெயர் தமிழர்களுடைய தற்கால நிலைப்பாடு ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அவளவு மகிழ்ச்சிதரக் கூடியதாக இல்லை.
வடமாகாண சபையை பொறுத்தளவில் முன்னைய ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். அமைச்சு செயலாளர்கள் உள்ளக ரீதியாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்.
மேற்கொண்ட மாற்றங்கள் ஒரு பெயரளவிலான மாற்றங்களாக மட்டுமே இருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது.
வடமாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பாரியளவு ஊழல் இருப்பதாக கூறப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
நெல்சிப் திட்டம் வடமாகாண சபை உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருகின்ற உள்ளுராட்சி திணைக்களத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளினுடைய வீதி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
ஆனால் பெருமளவு நிதி பயன்படுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி உயர்த்தினர்.
சாதாரண ஒரு சிறிய விடயத்திற்கே ஒரு பிரேரணையை நிறைவேற்றும் வடமாகாண சபை இந்த பாரிய நிதிமோசடி தொடர்பில் எந்தவொரு பிரேணையும் நிறைவேற்றாதது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியாக நெல்சிப் திட்டத்திற்கு பொறுப்பான உள்ளூராட்சி ஆணையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு பேரவைச்  செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மகிந்த ஆட்சியை ஊழல் நிறைந்த ஆட்சி என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆட்சி நடைபெறும் வடமாகாண சபையில் நெல்சிப் திட்ட ஊழலை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
வடமாகாண சபையில் கீழ் வருகின்ற அமைச்சுக்கள் யாவற்றினதும், பொதுச்சேவை ஆணைக்குழுவினதும், பிரதம செயலகம், ஆளுநர் செயலகத்தினுடையதும் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பேரவைச் செயலாளர் ஆகியோர் இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது பொது நிர்வாக சுற்றறிக்கையிலும் இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது,
ஆனால், பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர், உள்ளுராட்சி அமைச்சு செயலாளர், சுகாதார அமைச்சு செயலாளர் ஆகியோர் மட்டுமே இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இதில் என்ன வேடிக்கையென்றால் விவசாய அமைச்சு செயலாளரும், பேரவை செயலாளரும் இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட சேவை மூப்பு குறைந்த உத்தியோகத்தர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; சிலருடைய தயவிலும் அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடைய அழுத்தத்திலும் பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி வடமாகாண சபையில் மட்டுமே செய்யப்பட்ட இந்த நூறுவீத அரசியல் நியமனங்கள் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறப் போகும் தபால் மூல வாக்குகள் குறைவடைவதற்கு வாய்ப்பாகின்றது.
இதேபோன்று பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்தவர்களுக்கு திணைக்களத்தலைவர்களாக முடிசூட்டி அழகுபார்க்கப்படுகின்றது.
உண்மையில் திணைக்களத் தலைவர்களாக கட்டாயம் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டுமென்பதே விதி. கடந்த ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் சரி பிழைக்கு அப்பால் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் தற்போது தங்களுடைய ஆளுநர் தங்களுடைய பிரதம செயலாளர் என்று கூறிக் கொண்டு பிழையைச் சரியெனவும், சரியை பிழையெனவும் காட்டி அதிகாரிகளை வேண்டுமென்றால் ஏமாற்றலாம் ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது.
தவறுகள் திருத்தப்பட வேண்டும் ஒரு தவறை தொடர்ந்து செய்வதனால் தவறு சரியாகாது. பிழையானது சரிக்கு நிகராகாது. சரியை பிழையென்று காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கடந்த காலத்தில் சரியென நினைத்து புள்ளடி (x) போட்ட மக்கள் எதிர்காலத்தில் பிழையை நினைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு புள்ளடி (x) போடவும் தயங்க மாட்டார்கள் என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment