Wednesday, June 24, 2015

புலிகளின் செயற்பாடுகள் குறித்து கோத்தபாய ராஜபக்ஸ எச்சரிக்கை!

Wednesday, June 24, 2015
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில்  புலிச் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் புலிகளின் சர்வதேச வலையமைப்பும் ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மையமாகக் கொண்டு கோதபாய ராஜபக்ஸ, தனது முகநூல் பக்கத்தில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புலிகளின் செயற்பாடுகள் குறித்து கடந்த அரசாங்கம் மிக நிதானமாக கண்காணித்து வந்தது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீள தலைதூக்குவதனை தடுக்க முடிந்தது. 2009ம்ஆண்டின் பின்னர் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என்பதனால் புலிகள் முற்று முழுதாக அழிந்து விட்டதாக அர்த்தப்படாது. தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இவ்வாறான ஓர் முயற்சி முறியடிக்கப்பட்டது. புலி உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஓர் பின்னணியில் அரசு வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை குறைக்கத் தொடங்கியுள்ளது. மிக முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள்  புலிகள் மீள ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு தந்திரோபாய ரீதியாக வழியமைக்கும் அதேவேளை, நாட்டுக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். தேசியப் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் மிக கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment