Wednesday, May 20, 2015
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) எமது அடுத்த ஆட்சியில் கலைக்கப்படும் என ஐ. ம. சு. மு. செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்தார்.
இந்தப் பிரிவினூடாக அரசியல் பழிவாங்கல்கள், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு இது தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பான தீர்ப்பின் படி நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு ஏனையோர் தொடர்பில் செயற்படுவதற்கு தடை போடப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறு ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
நிதி மோசடி தொடர்பில் செயற்படுவதற்கு தனியான பிரிவு எதுவும் தேவையில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பவற்றினூடாக இது தொடர்பில் செயற்பட முடியும்.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் எமது எம்.பி க்களில் பலரை விளக்கமறியலில் வைக்கும் நோக்கத்துடனே இந்தப் பிரிவு ஆரம்பிக் கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வதே இவர்களின் நோக்கமாகும்.
மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு பல சட்டபூர்வமான பிரிவுகள் இருக்கையில் பிரதமர் தலைமையிலான குழுவின் உத்தரவு படி செயற்படும் பிரிவை ஏற்க முடியாது. ஜே. ஆர். ஜெயவர்தனவும் எதிர்தரப்பை பழிவாங்க இவ்வாறு செயற்பட்டார். எமது எம். பி, களை தேடித் தேடி குற் றச்சாட்டுகளை சோடித்து வழக்கு தொடருகின்றனர். நல்லாட்சி, சட்ட ஆதிக்கம் குறித்து பேசும் அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
அவசர காலச் சட்டமில்லாததால் பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் அரசியல் பழிவாங்களுக்காகவே இந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
49 எம். பி. களை வைத்துக் கொண்டு இவர்கள் இந்த ஆட்டம் ஆடுகின்றனர். எமது எம். பிக்கள் மீது திருடர்கள் என சேறு பூசி அவமதிக்க பொய் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
அரசியலமைப்பினால் வியாக்கியானம் வழங்கப்படாத நிறைவேற்று சபைதான் யாருக்கு எதிராக நட வடிக்கை எடுப்பது செயற்படுவது என தீர்மானிக்கிறது. எமது எம்.பிக்களை சிறையிலடைத்து விட்டு, விரைவாக தேர்தலுக்கு செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment