Tuesday, May 26, 2015

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை!

Tuesday, May 26, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர வைக்கவென இரவு பகலாக குரல் கொடுத்து வரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முன்னாள் ஊடக மற்றும் வெளிவிவகார அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
 
அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டில் பிரதமரை சந்தித்த கெஹலிய தன்னை மீண்டும் ஐதேகவில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அரச சொத்து சேதம் தொடர்பில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு காரணமாக அவர் இந்த முடிவில் இறங்கியுள்ளார். 'ஐயோ சேர், அது பொய் வழக்கு என்னை கட்சிக்குள் இணைத்து வழக்கை சமாளித்து விடுங்கள். நான் கண்டி மாவட்டத்தை கைக்கு மேல் வெற்றிபெறச் செய்கிறேன்' என்று கேட்டுள்ளார். ஆனால் பிரதமர் அதற்கு பதில் அளிக்கவில்லை.
 
இந்த சந்திப்பில் கெஹலியவுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் கலந்து கொண்டார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதால் தங்களை ஐதேகவில் இணைத்து வேட்பு மனு அளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளனர்.தான் உள்ளிட்ட குடும்பத்தில் அனைவரும் உண்மையான ஐதேக ஆதரவாளர்கள் என்பதால் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு அளித்து மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறும் தேசிய பட்டிலில் இடம் அளிக்குமாறும் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.இந்த கோரிக்கைகளுக்கு பிரதமர் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

No comments:

Post a Comment