Tuesday, April 07, 2015
தேசிய அரசாங்கம் எனும் சூழ்ச்சிக் கூட்டணியில் எம்மை பங்குதாரராக்க
முயற்சிக்கின்றனர். ஆனால் ரணில் - மைத்திரி கூட்டணியில் பங்கெடுக்க
நாம் விரும்பவில்லை. பாராளுமன்றத்தில் தனித்தே செயற்படுகின்றோம்
என முன்னாள் அமைச்சரும் மஹிந்தவை ஆதரிக்கும் அமைப்பின்
முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி எனக்கு கிடைக்குமாயின்
பலமான எதிரணியினை உருவாக்குவேன் என்றும்
குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பது
இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால்
அறிவிக்கப்படவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் வினவிய
போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தினை
அமைப்பதினால் நல்லாட்சியினை ஏற்படுத்தி விட முடியாது. ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள்
விடுதலை முன்னணியும் ஒரு அரசாங்கத்தில் இருப்பதனால் இவர்கள்
ஆட்சியினை நல்லாட்சியென குறிப்பிடமுடியாது.
எம்மையும் தேசிய அரசின் கூட்டமைப்பின் பங்குதாரராக
மாற்றிக்கொண்டு எதிரிகளை அடக்கவே முயற்சிக்கின்றனர். அமைச்சுப்
பதவிகளுக்கு ஆசைப்பட்டு நாட்டை சீரழிக்க ஒருபோதும் நாம் துணைபோக
மாட்டோம். எமது கூட்டணி மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் கொண்டு வந்து நாட்டை
பலப்படுத்தவே முயற்சிக்கின்றது. அதற்கமைய பாராளுமன்றத்திலும்
பலமாக செயற்பட வேண்டியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஆகியோரின் கூட்டணியில் சேர்ந்து பயணிப்பதை விடவும் தனித்து
பயணிப்பதற்கே விரும்புகின்றோம்.
அதேபோன்று பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக நாம்
செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இன்றும் பலமான
எதிர்க்கட்சியாக நாம் உருவாகினால் எம்முடன் இணங்கி செயற்பட பலர்
தயாராக இருக்கின்றனர். எனவே பாராளுமன்றக் கூட்டத்தில் இன்று
சபாநாயகர் தெரிவிக்கும் கருத்திற்கு அமையவே அனைத்து தீர்மானங்களும்
முன்னெடுக்கப்படும்.
சபாநாயகரின் தீர்மானங்களுக்கமைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி
பதவியினை எமக்கு வழங்கினால் அதனை சரியாக செய்து காட்டுவோம். அதேபோல்
பாராளுமன் றத்தின் பலமான எதிர்க்கட்சியாக உருவாகி இன்று நடந்து
கொண்டிருக்கும் அநீதிகளை தட்டிக் கேட்போம் எனவும் அவர் தெரிவித் தார்.
No comments:
Post a Comment