Tuesday, February 10, 2015
சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா!
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க
பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை
வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக போலியாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமையை அரசாங்கம் எவ்வாறு ரத்து செய்து, மீளவும் பதவியில் அமர்த்தியதோ அதேபோன்று தமது பாராளுமன்ற உறுப்புரிமையையும் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், இராணுவ பட்டங்களும் மீள வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் தமது ஆசனத்தை வழங்குவதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்த போதிலும் தற்போது சற்று பின்வாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜயந்த கெட்டகொட தமது ஆசனத்தை வழங்க முடியும் என தேர்தல் ஆணையாளரும், சட்ட மா அதிபரும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜயந்த கெட்டகொட பதவியை ராஜினாமா செய்தால், தாம் அந்தப் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கெட்டகொடவிடம் தாம் பதவியை யாசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்காகவோ பதவியை மீள அளிக்குமாறு கோரவில்லை எனவும், இந்த பதவி மிகவும் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்பது தமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய தமக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டால் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment