Tuesday, January 06, 2015
ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவருக்கு மாத்திரமே வாக்களிப்பது போதுமான போதிலும் இரு வேட்பாளர்கள் சமனான வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குகள் கவனத்திற் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முறைமை மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது சந்தேகம் வேண்டாம்
இலங்கை::இலங்கை ஜனநாயக குடியரசின் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ எதிர்வரும் 08 ஆம் திகதி நாடுமுழுவதும் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 19 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
வேட்பாளர்களுள் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த போட்டியாளர்களாவர்.
கடந்த 2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பிற்கமையவே எதிர்வரும் 08ம் திகதி வியாழக்கிழமை 22 தேர்தல் மாவட்டங்களிலுமுள்ள 160 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்படி இம்முறை 1,50,44,490 பேர் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஒருநாடு ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகிறது என்பதற்கான அடிப்படை அம்சமே தேர்தல் தான். ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக்கின்றது. மக்களினால் செய்யப்படும் ஆட்சி என்னும்போது மக்கள் தாம் விரும்பிய ஒருவரை நாட்டின் ஆட்சியாளராக நியமிப்பதனையே இது சுட்டி நிற்கின்றது.
அந்த வகையில் இலங்கையின் 21 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் தாம் விரும்பிய ஆட்சியாளரை தேர்தல் தினத்தன்று வாக்களிப்பதன் மூலம் தெரிவு செய்ய முடியும். உலகின் பல நாடுகளில் 21 ஆம் நூற்றாண்டிலும் சர்வாதிகார மற்றும் கொடுங்கோலாட்சி பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சிறிய நாடான இலங்கையின் ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுவதையிட்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
வாக்களிப்பின் அறிமுகம்
இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த போது 1931 ஆம் ஆண்டு டொனமூர் குழுவின் வருகையுடன் மிகவும் புரட்சிகரமான சூழலுக்கு மத்தியில் இலங்கையில் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது.
டொனமூர் தலைமையிலான குழுவினரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் நடைமுறையிலிருந்த கோல்புறூக், குறூ – மக்கலம், மானிங், மானிங் – டிவன்சயர் ஆகிய அரசியல் சீர்திருத்தங்களின் கீழ் காணப்பட்ட ஆட்சி முறையில் இலங்கைப் பிரதிநிதிகளையும் அரசியலில் பங்குபற்றச் செய்வதற்கான வாய்ப்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படாமை பெரும் குறைபாடாகவிருந்தது.
இந்த குறைபாட்டினால் ஒவ்வொரு அரசியல் சீர்திருத்தமும் தோல்வி கண்டிருந்த நிலையிலேயே 1931 ஆம் ஆண்டில் இலங்கை வந்த டொனமூர் குழுவினர் தமது டொனமூர் அரசியல் யாப்பில் சர்வசன வாக்குரிமையை உள்வாங்கினர்.
இது இலங்கை வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகும்.
எனினும் அப்போது இதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகமான நிலைமைகள் நாட்டிற்குள் புரட்சிகரமான சூழலை உருவாக்கியிருந்தது.
பிரித்தானியாவில் அக்கால கட்டத்தில் அதிகாரத்திற்கு வந்திருந்த தொழிற் கட்சி, குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகளை தாராளமாக பரிசீலிக்க முன்வந்தமை இதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்த போதிலும் அதே காலப்பகுதியில் இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம்,
சோவியத் யூனியனின் அக்டோபர் புரட்சி, இலங்கையில் தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சி என்பன இலங்கைப் பிரதிநிதிகளையும் அரசியலுக்குள் உள்வாங்குவதற்கு நிர்ப்பந்தித்திருந்தன.
ஏனைய நாடுகளில் கிளர்ந்தெழுந்த புரட்சிகளும் போராட்டங்களும் போன்று இலங்கை தொழிற்சங்கவாதிகளும் இலங்கையில் கிளர்ச்சியை உருவாக்க முன்னர் அவர்களுக்கு அரசியல் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்னும் நோக்கிலேயே ஆங்கிலேயர்களால் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இலங்கையின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும் அவர்களது இயக்கங்களைச் சேர்ந்தோரும் இதனை முழுமையாக எதிர்த்து நின்றனர்.
இவ்வாறான பல அழுத்தங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நாட்டில் சர்வசன வாக்குரிமை அறிமுகப் படுத்ப்பட்டமை ஒரு புரட்சிகரமான அம்சமாகவே கருதப்படுகிறது. இதனால் பல சாதக, பாதகமான விளைவுகள் தோற்றம் பெற்ற போதிலும் அக்காலகட்டம் முதல் 21 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளை ஆண், பெண் இரு பாலாருக்கும் ஆட்சியாளரை அல்லது மக்கள் பிரதிநிதியை தெரிவு செய்வதற்கான உரிமை கிடைத்துள்ளது.
வாக்களிப்பது உங்கள் உரிமை
“
வாக்களிப்பது உங்கள் உரிமை” என்பதனை ஒவ்வொரு பிரஜையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு தேர்தலிலும் 4 முதல் 5 சதவீதமான வாக்குகளை அளிக்க வாக்காளர்கள் முன்வருவதில்லை.
பலர் தேர்தலை ஒரு பொருட்டாக கருதாமையே இதற்குக் காரணமாகும். தேர்தல் அரசியல்வாதிகளுக்கும் கல்விமான்களுக்கும் உட்பட்டது. இதில் ஏன் நாம் தலையிட வேண்டும். பிறருக்கு வாக்களிப்பதால் எனக்கு என்ன இலாபம் இருக்கிறது போன்ற தவறான எண்ணங்களே தேர்தலை அலட்சியம் செய்ய வழிவகுக்கிறது.
வாக்களிக்கும் உரிமையினை சரியாக பயன்படுத்த வேண்டியது 21 வயதைக் கடந்த ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். உங்களது வாக்கை ஒரு இரகசிய புள்ளடியாக வழங்குவதன் மூலம் உங்கள் விருப்பைத் தெரிவிக்கலாம்.
வாக்களிக்கும் முறை
பலர் எத்தனையோ இடர்பாடுகளுக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்குகளை வழங்குகின்ற போதிலும் அவற்றை சரியான முறையில் குறியீடு செய்யாமையினால் நிராகரிக்கப்படுகின்ற நிலைமை மிகவும் துரதிஷ்டவசமானது. மேலும் மக்கள் மத்தியில் இது குறித்து போதிய விழிப்புணர்வு செய்யப்படாமையே இதற்குக் காரணமாகும்.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் மூவர் போட்டியிடும் சந்தர்ப்பங்களில் முதலாவது விருப்புவாக்கு இரண்டாவது விருப்பு வாக்கு என்ற வகையில் இருவருக்கு வாக்களிக்க முடியும்.
மூவருக்கு மேற்பட்டோர் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் மூவருக்கு வாக்களிக்க முடியும். அந்தவகையில் எதிர்வரும் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 19 பேர் போட்டியிடுவதனால் வாக்காளர்கள் தமது விருப்பத்திற்கமைய பிரதான வாக்கிற்கு மேலதிகமாக இரண்டாவது மூன்றாவது விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.
வாக்காளர்கள் இரகசிய குறியீடாக புள்ளடி (X) அல்லது இலக்கங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் சட்டம் வழிவகுக்கின்றது. எனினும் மூன்று புள்ளடிகள் அல்லது ஒருவருக்கே மூன்று வாக்குகளையும் வழங்கும் சந்தர்ப்பத்தில் அந்த வாக்கு நிராகரிக்கப்படுமென்பதனை கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவருக்கு மாத்திரமே வாக்களிப்பது போதுமான போதிலும் இரு வேட்பாளர்கள் சமனான வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குகள் கவனத்திற் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் கணக்கிடப்படும் முறை
அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளை யாராவது ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் அவர் ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தப்படுவார்.
அரைவாசிக்கு மேல் எந்த வேட்பாளரும் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாவிடின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இருவரைத் தவிர ஏனையோர் கணிப்பீட்டிலிருந்து விலக்கப்படுவர். பின்னர் கணிப்பீட்டிலிருந்து விலக்கப்பட்டவர்களின் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகள் முதல் இருவருக்கும் வழங்கப்பட்டிருப்பின் அவ்வாக்குகள் அவர்களின் வாக்குகளுடன் சேர்ந்து கணக்கிடப்படும். இதன் பின் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ள்ளாரென பிரகடனப்படுத்தப்படுவார்.
வாக்காளர்கள் அச்சப்பட வேண்டாம்
வாக்களிப்பது உங்கள் உரிமையென்பதனால் வாக்குகளை வழங்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்காளர்கள் அச்சப்படத் தேவையில்லை. நீங்கள் விரும்பிய வேட்பாளருக்கு சுதந்திரமான முறையில் உங்களால் வாக்களிக்க முடியும். உங்களது வாக்குகள் இரகசியமாக பேணப்படும் என்ற முழு மனதுடனான நம்பிக்கையுடன் நீங்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஜனநாயக நாடு என்ற வகையில் நீங்கள் அடையாளமிட்ட வாக்குச் சீட்டினதும் உங்களதும் பாதுகாப்பினை தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
மேலும் வாக்களிப்பு நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசி, ஒளிப்பதிவு கருவி, புகைப்பட கருவி, மதுபானம், சிகரட் என்பன கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று முழு நாட்டினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் வாக்குறுதியளித்துள்ளார். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் ஆயுதம் தாங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் 20 ஆயிரம் பொலிஸாரும் ரோந்து நடவடிக்கைகளுக்காக 5 ஆயிரம் பொலிஸாரும் சேவை யிலீடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும் பொலிஸாரையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல் முறைமை மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது சந்தேகம் வேண்டாம்
வெற்று வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு வருவது முதல் தேர்தல் பெறுபேறுகள் வெளிடப்படும் வரையிலான அனைத்து செயற்பாடுகளும் ஒன்றுடனொன்று தொடர்புபடும் வகையில் மிகவும் நுட்பமாகவும் கிரமமாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதனால் எவ்வகையிலான முறைகேடுகளும் இடம்பெறுவதற்கு அங்கு சந்தர்ப்பங்கள் இல்லையென்ற நம்பிக்கையை வாக்காளர்கள் உருவாக்கிக்கொள்ளும் அதேநேரம் அவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதாக கூறப்படுவது வெறும் மாயை என்பதனை மக்கள் உணர வேண்டும்.
வாக்களிப்பு நிலையம், வாக்கு எண்ணும் நிலையம், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களுடன் வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லல் என்பன பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெறுவதனால் கள்ள வாக்களித்தல் என்பது வெறும் வாய்வார்த்தையாக மாத்திரமே இருக்க முடியும்.
போட்டிப் பரீட்சை மூலம் எவ்வித அரசியல் செல்வாக்குமின்றி அரசாங்க சேவைக்கு உள்வாங்கப்பட்ட அதிகாரிகளே தேர்தல் பணிகளின் பாரிய பொறுப்புக்களை ஏற்க வழிசமைக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் வாக்கு மோசடிகளில் ஈடுபட மாட்டார்களென்ற வாக்குறுதியை தேர்தல்கள் திணைக்களம் அளித்துள்ளது.
அடையாள அட்டை
வாக்காளர்கள் வாக்களிக்கும்போது தமது தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டி, நடைமுறையிலுள்ள வாகன அனுமதிப்பத்திரம், அரசாங்க ஓய்வூதிய அடையாள அட்டை, சமய தலைவர்களுக்கான அடையாள அட்டை, மூத்த பிரஜைகளுக்குரிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றுடன் சமூகமளித்தால் மாத்திரமே வாக்களிக்க முடியுமென்பதனை கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த வழிசமைக்கும் அதேநேரம் வாக்களிக்கும் உங்கள் உரிமையை முறையாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப் படுத்துவோமாக.
No comments:
Post a Comment