Sunday, January 4, 2015

ஆயுதங்களுடன் வந்த பாக். படகு வெடித்து சிதறியது: தீவிரவாதிகளே தகர்த்து மூழ்கடித்தனர்!

Sunday, January 04, 2015
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கடல்வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து மும்பை தாக்குதலை நடத்தியதை போன்று, மற்றொரு தாக்குதலை நடத்த குஜராத் கடல் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த படகை, இந்திய கடற்படை சுற்றிவளைத்ததை அடுத்து, ஆதாரங்களை அழிப்பதற்காக தாங்களாகவே படகை வெடிக்கச் செய்தனர்.

இதனால் மற்றொரு மும்பை தாக்குதல் தடுக்கப்பட்டதாக அனைவராலும் பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 2 படகுகளில் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதையடுத்து கடலில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 31ம் தேதி நள்ளிரவில், குஜராத் மாநிலத்தை ஒட்டியுள்ள அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, குஜராத்தின் போர்பந்தரில் இருந்து சுமார் 365 கி.மீ. தொலைவில் இந்திய கடல் எல்லையில், பாகிஸ்தான் நாட்டு மீன்பிடி படகு ஒன்று ஊடுருவி வருவதை பார்த்துள்ளனர். உடனடியாக, அந்தப் படகை நிறுத்துமாறு கடலோரக் காவல்படையினர் எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த படகில் வந்தவர்கள் தப்பிப்பதற்காக படகின் வேகத்தை கூட்டி உள்ளனர்.

தொடர்ந்து, கடலோரலோரக் காவல்படையின் ரோந்து கப்பலும் விரட்டிச் சென்றது. அத்துமீறிய படகில், 4 பேர் இருந்ததை படையினர் பார்த்துள்ளனர். படகை நிறுத்துமாறு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் எச்சரித்தனர். ஆனால், எந்த எச்சரிக்கையையும் மதிக்காத அவர்கள் தொடர்ந்து படகை வேகமாக செலுத்தினர்.

சில மணி நேரங்கள் விரட்டிய நிலையில், அந்த படகு நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து வெடித்து. அதில் வெடிபொருட்கள் இருந்ததால் பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் எரிந்த நிலையில் படகு கடலில் மூழ்கியது. மோசமான வானிலை மற்றும் இருள் சூழ்ந்திருந்ததால், கடலோரக் காவல்படையினரால் படகிலிருந்தவர்களை மீட்க முடியவில்லை.
அவர்களும் தீயில் கருகி இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கராச்சியிலிருந்து கடல் வழியாக படகில் வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் பயங்கர தாக்குதலை அரங்கேற்றினர்.

அதே போல குஜராத்தில் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக படகில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. படகில் வெடிபொருட்கள் இருந்ததால் அந்த சந்தேகம் வலுத்துள்ளது. இந்திய எல்லையில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை ஊடுவிய அந்த பாகிஸ்தான் படகு, கராச்சியின் கேட்டி பந்தர் பகுதியிலிருந்து வந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குஜராத் கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வந்தவர்கள் தீவிரவாதிகளே: ஊடுருவிய படகில் வந்தவர்கள் தீவிரவாதிகள் தான் என இந்திய கடலோரக் காவல்படை உறுதியாக கூறி உள்ளது.

மேலும், அவர்கள் வந்த படகில் வயர்லெஸ் கருவிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுவாக அத்தகைய கருவிகளை பாகிஸ்தான் ராணுவம்தான் பயன்படுத்தும். சம்பவம் குறித்து கடலோரக் காவல்படையின் பாதுகாப்பு துணை டைரக்டர் ஜெனரல் கே.ஆர்.நாடியால் கூறுகையில், ‘பாகிஸ்தான் படகு 31ம்தேதி இரவு 10.30 மணிக்கு ஊடுருவியது.

அதனை படையின் ரோந்து கப்பல் விரட்டியதால், தப்பிக்க முயன்றனர். தொடக்கத்தில் படகின் மேல்தளத்தில் இருந்த அவர்கள், ஒரு கட்டத்தில் தப்பிக்க முடியாது என்பதால் படகின் கீழ் தளத்தில் சென்று தீ வைத்து எரித்தனர்.

1ம் தேதி அதிகாலை 3.30 மணி வரை படகை பிடிப்பதற்கான முயற்சிகள் நடந்தன. அப்போதுதான் திடீரென படகு வெடித்து சிதறியது. காலை 6.30 மணி அளவில் படகு முழுவதுமாக எரிந்து மூழ்கியது‘ என்றார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் படகு ஊடுருவதற்கு முன் நடந்த தொலைபேசி உரையாடலை பாதுகாப்பு அமைச்சகம் ஒட்டு கேட்டுள்ளது. அதில், 2 தீவிரவாதிகள் பேசி உள்ளனர். ஒருவன் பாகிஸ்தானில் இருந்தும், ஒருவன் படகில் இருந்தும் பேசி உள்ளான். பாகிஸ்தானிலிருந்து பேசியவன், ‘சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.
 
படகில் உள்ள ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் பணம் வழங்குவோம்‘ என கூறி உள்ளான். படகில் இருந்தவன், ‘ஆயுதங்கள் எங்களுக்கு கிடைத்துவிட்டன‘ என்று கடைசியாக பேசி உள்ளான்.

No comments:

Post a Comment