Sunday, January 25, 2015

ஜனாதிபதி மைத்திரிபால உத்தியோகபூர்வ விஜயம் – பெப்ரவரியில் இந்தியா, மார்ச்சில் சீனா!

Sunday, January 25, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வார். அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரச பயணமாக இலங்கைக்கு வருகிறார். இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால உத்தியோகபூர்வ பயணமாக சீனா செல்கிறார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் முதலாவது பயணமாக ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ளார். அதன்படி அவர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கு அரச பயணத்தை மேற்கொள்ள திகதிகளை வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
 
தற்போது இந்தத் திகதிகளில் இந்தியப் பிரதமரினால் சந்திப்பில் கலந்துகொள்ள முடியுமா என்பது தொடர்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்படவுள்ளன. குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் காணப்படும் அரசியல், பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த பயணத்தின்போது ஆராயப்படவுள்ளது.
 
ஜனாதிபதி மைத்திரிபாலவின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கான முதலாவது அரச பயணமாக வருகிறார். இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ பயணமாக சீனாவுக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்கு சீன அரசால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவித்தன. இந்தப் பயணத்தின்போது சீன ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment