Tuesday, December 30, 2014
இலங்கை::நாட்டில் நிலவும் மோஷமான காலநிலை காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுமாறு எந்தவொரு அபேட்சகரோ, கட்சியோ தேர்தல்கள் செயலகத்தைக் கோரவில்லையென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தனது சட்டத்தரணி மூலம், நாட்டில் நிலவும் மோஷமான காலநிலையினால் தேர்தலைப் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் நிலவும் மோஷமான காலநிலையினால் வாக்காளர் அட்டை விநியோகத்துக்கும், தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்படும் விசேட ஆள் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் நிலைமை உள்ளதாக கட்சிகளினால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமான தீர்வாக அதற்குரிய கால எல்லையை நீடித்துள்ளோம். வாக்காளர் அட்டை விநியோகத்தை தபால் திணைக்களத்துடன் ஆலோசித்து எதிர்வரும் 4 ஆம் திகதி வரை முன்னெடுப்பதற்கும், விசேட ஆள் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லையை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எமது செய்திப் பிரிவிடம் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment