Wednesday, December 24, 2014
லாகூர்: பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஸ்கர் இ ஜாங்வி தீவிரவாத இயக்கத் தலைவர் மாலிக் இஷாக், பல்வேறு குற்ற செயல்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது காவலை நீட்டிக்க பஞ்சாப் பிராந்திய அரசு விரும்பாததால், நேற்று அவரை நீதிமன்றம் விடுவித்தது. கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் கடாபி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அப்போது பஸ்சில் வந்த இலங்கை அணியினர் மீது மாலிக் இஷாக் உள்பட 12 தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 6 போலீசார் உட்பட 8 பேர் பலியானார்கள். இலங்கை அணியை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு லஸ்கர் இ ஜாங்வி தீவிரவாத இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் தலைவர் மாலிக், பஞ்சாப் பிராந்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த 3 வருடங்களாக அவர்மீதான வழக்கு விசாரணை பஞ்சாப் பிராந்திய தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மாலிக் இஷாக்கின் சிறைக் காவல் அனுமதி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்துக்கு பலத்த காவலுடன் கொண்டு வரப்பட்டார்.நீதிமன்றத்தில் மாலிக்கின் சிறைக் காவலை நீட்டிக்க பஞ்சாப் பிராந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. மாலிக் இஷாக் நேற்று சிறையிலிருந்து விடுதலை ஆனார்.பெஷாவர் நகரில் நடைபெற்ற தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பள்ளி மாணவர்கள் பலியானதைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரீப் அரசு தலிபான்களின் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், மற்ற தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் மீது கருணை காட்டி வருகிறது என்று மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment