Monday, December 29, 2014

முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் செய்தியானது ஒரு துரோகத்தனமான செயற்பாடாகும்: பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Monday, December 29, 2014
இலங்கை::
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிச்சென்றாலும் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தினையே ஆதரிப்பார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் செய்தியானது ஒரு துரோகத்தனமான செயற்பாடாகும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாம் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றார்கள். இது மிகவும் துரோகத்தனமான செயலாகும். முஸ்லிம் தலைவர்கள் தற்போது முஸ்லிம் மக்களை புறக்கணித்திருக்கின்றார்கள்.

இச்செயல் மூலம் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகளை அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். இலங்கையை பொறுத்தவரை இனத்துவேஷமின்றி செயற்படுகின்ற ஒரு தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தான். யுத்தகாலத்தில் அனுபவித்த துன்பதுயரங்களிலிருந்து மக்களை விடுவித்து நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவைத்த தலைவர் தான் மகிந்த அவர்கள். அமைச்சர் ஹிஸ்புல்லாவையும் அதாவுல்லாவையும் நாம் பாராட்ட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை அவர்கள் இருவரும் முஸ்லிம் மக்களுக்கு நல்ல தலைவர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் ஒரு அரசிடமிருந்து வசதிவாய்ப்புகளை அனுபவித்துவிட்டு இறுதிக்கட்டத்தில் விட்டுவிலகுவதென்பது துரோகச்செயலாகும். இதுவிடயத்தில் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே வெற்றி பெறப்போகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஏனென்றால் மக்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்கள். தமிழ்மக்கள் தமது நன்றிக்கடனை செலுத்துவதற்கு இது ஏற்ற சந்தர்ப்பமாகும். ஆகவே அவர்கள் அதை நன்குணர்ந்து ஜனாதிபதி மகிந்தவுக்கே தமது வாக்குகளை அளிப்பார்கள்.

இது கிழக்கு மாகாணத்தில் நடந்துவரும் அபிவிருத்திப் பணிகளை மனதில்கொண்டு மக்கள் சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய காலமாகும். மண்முனைத்துறை பாலம்,கல்லடி பாலம்,காயங்கேணி பாலம்,பனிச்சங்கேணி பாலம், புற்றுநோய் வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி வைத்தியசாலை,கல்வித் திட்டங்கள், புதிய பாடசாலை கட்டிடங்கள், மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களை நமக்கு வழங்கிய ஜனாதிபதி மகிந்தவை நாம் ஏன் மாற்றவேண்டும். மாற்றம் வருகின்றபோது எவ்வாறான அபாயங்கள் பின்னால் இருக்கின்றதென்பது எமக்குத்தெரியாது. இருமுறை ஜனாதிபதியாக பணியாற்றிய மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி எங்களுடைய நாட்டின் சீரான வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அனைத்து அபிலாஷைகளையும் அனுபவிக்கின்ற ஒரு நாடாக மாற்றுகின்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்னும் மௌனம் சாதித்துவருகின்றது. அவர்களால் எதிரணிக்கு வாக்களிக்கும்படி வெளிப்படையாக கூறமுடியவில்லை. ஏனென்றால் ஹெலஉறுமய, ஜே.வி.பி போன்ற இனத்துவேஷக்கட்சிகள் எதிரணியில் இருக்கின்றன. அவை இலங்கை என்பது ஒரு பௌத்த நாடு ,இங்கு தமிழருக்கோ முஸ்லிம்களுக்கோ இடமில்லை என்ற கொள்கையுடைய கட்சிகளாகும். இதை கருத்தில் கொண்டு எமது தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தனைகாலமும் அரசாங்கத்துடன் இணைந்திருந்து பதவி பட்டங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு இறுதிக்கட்டத்தில் துரோகமிழைத்துவிட்டு விலகிச் செல்லும் தலைவர்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தங்களுக்கும் இதுபோன்றுதான் துரோகம் செய்வார்கள் என்ற அங்கலாய்ப்பு மக்கள் மனங்களில் இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகிச்சென்றாலும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மகிந்தவை ஆதரிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.

ஏனெனில் யுத்தகாலத்தில் அவர்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து அவர்களை விடுவித்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தான். ஆகையால் பெரும்பாலான முஸ்லிம் மக்களின் வாக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குத்தான் கிடைக்கும். தமிழ்மக்களும் அவருக்கு வாக்களிக்கும்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமோகவெற்றி பெறுவார். வருகின்ற பொங்கல் விழாவை தமிழர்களாகிய நாங்கள் வெற்றிவிழாவாக கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment