Wednesday, December 31, 2014

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகிறது. அப்படியென்றால் போர்க்குற்றத்தை இழப்பதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதிக்கு முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் ஆதரவு வழங்கியது?- கோத்தபாய ராஜபக்‌ஷ!

Wednesday, December 31, 2014
இலங்கை::
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது.
 
மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது. – இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதூகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ. தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- நாம் பொய்சொல்லி வாக்குக் கேட்கவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து வடக்கு, கிழக்கில் எவ்வளவோ அபிவிருத்திகளைச் செய்திருக்கிறோம். இது அந்த மக்களுக்குத் தெரியும். அந்தக் கடந்த கால அனுபங்களை நாங்கள் இப்போது
 
பேசவிரும்பவில்லை. ஆனால் அந்த மக்கள் அனுபவித்த துயரங்களை நாம் இல்லாமல் செய்திருக்கிறோம். அந்த நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றியிருக்கிறோம். சரணடைந்த போராளிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகத்துடன் ஒன்றிணைத்திருக்கிறோம். அபிருவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
 
அங்கு விவசாயகம் முன்னேற்றமடைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாதவாறு கல்வி மேம்பாடடைந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகளை வைத்து இதனை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஆனால் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? அவர் சுகாதார அமைச்சராக இருந்துகூட தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகிறது. அப்படியென்றால் போர்க்குற்றத்தை இழப்பதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதிக்கு முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் ஆதரவு வழங்கியது? இது அவர்களது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. நாம் செய்தவற்றைக் கூறியே வாக்குக் கேட்கிறோம். இல்லாத பொய்களை சொல்லவில்லை.
 
அமைச்சர்களான ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் அரசுடன் இணைந்திருந்து அனைத்தையும் பெற்று உழைத்துக்கொண்டு அரசின் முதுகில் குத்தியிருக்கின்றனர். இதனையா இஸ்லாமிய மதம் போதிக்கிறது என எண்ணத் தொன்றுகிறது. இவர்கள் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றனர். முன்னரெல்லாம் ஐ.தே.க. அரசினாலேயே தமிழருக்கெதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டன. ஆனால் எமது அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. இழந்துபோனதாகக் கருதப்பட்ட நகைகளைக் கூட மீள ஒப்படைத்தோம். இதுவே எமது நடவடிக்கையாகும். வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்மை தெரியும். அவர்கள் முன்பு அனுபவித்ததுக்கும் இப்போது வாழ்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் புரிந்திருப்பார்கள். -

No comments:

Post a Comment