Monday, December 29, 2014
இலங்கை::அசாதாரண காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வைத்து அரசியல் செய்யாது பொது எதிரணியும் எம்முடன் இணைந்து மக்களை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளும் அரசாங்கம் மிக மோசமான காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடருமாயின் தேர்தலை பிற்போட வாய்ப்பு உள்ளது.
இலங்கை::அசாதாரண காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வைத்து அரசியல் செய்யாது பொது எதிரணியும் எம்முடன் இணைந்து மக்களை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளும் அரசாங்கம் மிக மோசமான காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடருமாயின் தேர்தலை பிற்போட வாய்ப்பு உள்ளது.
எனினும் அதற்கான அவசியம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.அரசாங்கத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் இணைந்து கொண்டிருந்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கடந்த இரு வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக இதுவரையில் நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 6 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 16 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இதுவரையில் மொத்தமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளதுடன் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் 15 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அசாதாரண மோசமான காலநிலை காரணமாக 4 ஆயிரத்து 571 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 14 ஆயிரத்து 511 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
நிவாரணம்
இதுவரையில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 558 பேராக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக அரசாங்கம் வழங்கிக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட தொகை என நிதியினை ஒதுக்கி சேவையினை வழங்க முடியாது. இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது அனைத்து உடமைகளையும் இழந்து தனித்துள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது. இன்று வரையில் நாம் 500 மில்லியன் ரூபாவரையில் நிதி ஒதுக்கி அப்பகுதி மக்களுக்கான நிவாரணங்களை வழங்கி வருகின்றோம். தேவைப்படுமிடத்து மேலும் நிதி உதவிகளின் மூலம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வோம்.
மீட்புப் பணிகள்
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக காணாமல் போயுள்ள பொதுமக்களை மீட்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளின் உதவியுடன் இன்று வரையில் மீட்புப் பணிகள் தொடர்கின்றது. எனினும் பதுளை போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுகின்றமையினால் இராணுவத்தினரும் எச்சரிக்கையுடன் செயற்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் எதிரணியினர் பொது மேடைகளிலும் ஊடகங்களின் முன்னிலையிலும் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்தை பழி சுமத்தி பேசுகின்றனரே தவிர இது வரையில் இவர்கள் பொதுமக்களை பார்வையிடவோ நிவாரணங்களை வழங்கவோ முன் வரவில்லை என்பது கவலையளிக்கின்றது. இந்த சந்தர்ப்பத்திலும் எதிரணியினர் அரசியல் பேசாது அனைவரும் ஒன்றிணைந்து மக்களை பாதுகாக்க உதவ வேண்டும்.
தேர்தல் பிற்போடப்படும் சாத்தியம்?
மேலும், இன்றுவரையில் நாட்டில் மிக மோசமான காலநிலை நிலவுகின்றது. நாட்டில் அனர்த்த பகுதிகளும் ஏதேனும் ஒரு வகையில் காலநிலை சீர் கேட்டினால் பாதிக்கப்பட்டு விட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது ஜனாதிபதித் தேர்தலும் வருகின்றது. எனினும் ஜனாதிபதித் தேர்தலின் திகதிகள் பிற்போடப்படுவது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை. தற்போது நிலவும் காலநிலை இன்னும் ஓர் இரு தினங்களில் மாற்றமடையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனபோதிலும் தொடர்ந்தும் நாட்டில் மிக மோசமான காலநிலை நிலவுமாயின் அசாதாரண நிலைமைகள் தொடருமாயின் தேர்தல் தினத்தை பிற்போடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானங்களை மேற்கொள்வார். எனினும் இதுவரையில் அதற்கான தேவை ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment