Sunday, November 02, 2014
இலங்கை::வட மாகாண சபை ஆட்சி பீடமேறி கடந்த வார இறுதியுடன் சரியாக ஒரு வருடம் கழிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் வடமாகாண சபையை தலைமையேற்று நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தம்மால் மேற்கொள்ளப்பட்ட ஓர் அபிவிருத்தி நடவடிக்கை அல்லது முன்னேற்றகரமான ஒரு சிறு திட்டம் இது என ஒன்றையாவது வெளியுலகிற்குக் கூற முடியுமா? நிச்சயமாக இல்லை. இந்த ஒரு வருட காலத்தில் எத்தனையோ விடயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இலங்கை::வட மாகாண சபை ஆட்சி பீடமேறி கடந்த வார இறுதியுடன் சரியாக ஒரு வருடம் கழிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் வடமாகாண சபையை தலைமையேற்று நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தம்மால் மேற்கொள்ளப்பட்ட ஓர் அபிவிருத்தி நடவடிக்கை அல்லது முன்னேற்றகரமான ஒரு சிறு திட்டம் இது என ஒன்றையாவது வெளியுலகிற்குக் கூற முடியுமா? நிச்சயமாக இல்லை. இந்த ஒரு வருட காலத்தில் எத்தனையோ விடயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
நிறைவேற்றப்பட முடியாதவை என மிகத் தெளிவாகத் தெரிந்த பல விடயங்க ளுக்கும் மக்கள் முன்பாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வடமாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சியிலிருந்து எதிராகச் செயற்படுவதைத் தவிர எதுவுமே ஆக்கபூர்வமாகச் செய்ய முடியாது என்பதை அவர்கள் தாமாகவே நிரூபித்துள்ளனர். தாமாகவும் செய்ய முடியாது, அரசாங்கத்துடன் இணைந்து சென்று காரியங்களைச் செய்து முடிக்கவும் தெரியாது எனும் அவப் பெயரை வாக்களித்த மக்களிடமிருந்து பெற்றவர்களாக அவர்களது நிலை இப்போது உள்ளது.
கடந்த ஒரு வருடம் தொடரும் இந்நிலை அடுத்த நான்கு வருடங்களுக்கும் தொடரத்தான் வேண்டுமா? எனும் கேள்வி வாக்களித்த அம்மக்கள் முன்பாக இப்போது எழத் தொடங்கியுள்ளது. வடக்கில் மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினாலேயே மக்கள் முன்பாக இவர்கள் பிரகாசிக்கலாம். உதாரணமாக இருபத்து நான்கு வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்தேவி புகையிரத சேவையை இவர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தால் அதில் ஓர் அர்த்தம் இருந்திருக்கும்.
ஆனால் மாதம் இரண்டு அல்லது மூன்று தடவைகள் சபையைக் கூட்டுவதும் அங்கு மாகாண சபை வரம்பிற்குள் வராத அர்த்தமற்ற விடயங்கள் பற்றி ஆராய்ந்து பிரேரணைகளை நிறைவேற்றுவதுமாகவே இவர்களது ஒரு வருட மாகாண அரசியல் கழிந்து விட்டது. மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிகளை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தத் தெரியாமையினால் அந்நிதியில் பெரும் தொகை மீளவும் திறைசேரியைச் சென்றடைகிறது. இது மாகாண சபை மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய பாரிய துரோகமாகும்.
மக்களது மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டங்களுக்காக மத்திய அரசாங்கத் தினால் வழங்கப்படும் நிதி குறித்து அலட்சியமாக இருந்துவரும் இவர்கள் தமது தனிப்பட்ட சலுகைகளுக்காக அரசாங்கத்திடமிருந்து எதையெல்லாம் பெற வேண்டுமோ அனைத்தையும் பெற்றுக் கொள்கின்றனர். இதற்காக இவர்கள் ஏனைய மாகாண சபையினருடன் தனிப்பட்ட சலுகைகளில் விபரங்களை அறிந்தும் கொள்கின்றனர். இவர்களது மக்கள் செல்வாக்குப் பெற்ற அரசியல் எவ்வாறு அமைந்துள்ளது?
மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் என பல விடயங்கள் உள்ளன. வட மாகாண சபையைப் பொறுத்தவரையில் குறிப்பாக இரணைமடு குள நீர் விநியோகத் திட்டம் மாகாண சபையின் அதிகாரத்திற்குள் வரும் மிகப் பெரிய திட்டமாகும். ஆதரவு தருகிறோம், மக்கள் நலன் கருதி இதனைச் செயற்படுத்துமாறு மத்திய அரசாங்கம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தது. அத்துடன் இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பெருமளவு நிதியை ஒதுக்கியும் உள்ளது.
ஆனால் இவர்களோ அந்நீரை கிளிநொச்சிக்கு விடுவதா அல்லது யாழ்ப்பாணத் திற்கு விடுவதா எனும் முடிவிற்கே வர முடியாது தமக்குள் இழுபறிப்பட்ட நிலையில் உள்ளனர். அதனால் இதில் இன்னமும் ஒரு முடிவிற்கு வர முடியாத நிலை காணப்படுகிறது. வடக்கில் மாகாண சபை அமையப் பெறாதிருந்திருந்தால் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அது உள்வாங்கப்பட்டு இன்று இத்திட் டமே நிறைவு பெற்றிருக்கும். ஜனாதிபதியே வந்து அத்திட்டத்தை ஆரம்பித்தும் வைத்திருப்பார்.
ஆனால் இவர்கள் தமக்கு வாக்களித்த எத்தனையோ விவசாயிகளின் வாழ்க்கை முன்னேறத் தடையாக இருந்து வருகின்றனர். தம்மிடம் திறமையில்லை என்பதை மறைப்பதற்காக தம்மால் முடியாத விடயங்களுக்கு அரசாங்கத்தின் மீது பழியைப் போடுவதே இவர்களது வழமையான அரசியலாக இருந்து வருகிறது. வடக்கில் சர்வதேச விமான நிலையத்தையும், துறைமுகத்தையும் அமைப்பது என்பது மாகாண சபை அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. அது மத்திய அரசாங்கம் செய்ய வேண்டியது. ஆனால் இவ்விரண்டு விடயங்களையும் தாம் செய்வதாக பிரேரணை களை நிறைவேற்றுகிறார்கள். உண்மையிலேயே வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் நிலை கண்டு கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களில் எவருமே அரசியல்வாதிகள் கிடையாது. முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட மாகாண உறுப்பினர் அனந்தி எழிலன் வரை எல்லோருமே ஏதோவொரு வகையில் அரசாங்க அதிகாரிகளாகச் செயற்பட்டவர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டமையினால் இவர்களுக்கு வாக்குகள் கிடைத்தனவே அன்றி எவருமே அரசியல்வாதிகளோ அனுபவசாலி களோ கிடையாது. இவர்களை வைத்து பல பில்லியன் மற்றும் மில்லியன் ரூபா சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்துவது என்பது கடினமான காரியமே. அத்துடன் இவர்கள் அரசியலுக்கு புதுமுகங்கள் மட்டுமல்ல, எடுத்த எடுப்பிலேயே அதிகாரங்களையும் தமதாக்கிக் கொண்டதால் அந்த மமதையும் இவர்களை ஆட் கொண்டுள்ளது. அதனைவிடவும் தமக்கிடையேயான பதவிப் போட்டிகள் காரணமாக இவர்கள் மக்களுக்கான திட்டங்களைக் குழப்பவும் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மாகாண அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் எழுந்த பதவிப் போட்டிகள் இன்னமும் தணியவில்லை.
இதற்கிடையில் பாராளுமன்றத் தேர்தல் வந்தால் தமக்கும் ஆசனம் தர வேண்டும் எனச் சிலர் தமது அடுத்த பதவி உயர்வு குறித்த ஆசையில் உள்ளனர். இந்நிலையில் இவர்களிடமிருந்து மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
எனவே பதவிகளை நீங்கள் வைத்திருங்கள். மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள இடமளியுங்கள் என்பதனையே மக்கள் வேண்டி நிற்கின்றனர். யுத்தம் முடிவடைந்து கடந்த ஐந்து வருடங்களில் மாகாண சபை வர முந்திய நான்கு வருடங்களில் அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டது. ஆனால் இன்று கடந்த ஒரு வருட காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் ஏனைய மாகாண சபைகளைப் போலவே வட மாகாண சபைக்கும் தேவையான நிதியை வழங்குகின்றது. மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் பல வேலைத் திட்டங்களை வட மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனை விடவும் அன்று முதல் இன்றுவரை வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக மத்திய அரசாங்கம் பல விடயங்களை மக்க ளுக்காகச் செய்து வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியாவது மாகாண சபையை வைத்து அரசியல் நடத்தாது மக்களுக்கான சேவையைச் செய்ய முன்வர வேண்டும். வெறுமனே அரசாங்கத்தைக் குறை கூறுவதால் பலனில்லை. உங்களால் செய்யக் கூடியவற்றையே செய்ய முடியாதவர்களாக இருக்கையில் செய்ய முடியாதவைகளுக்காகக் கவலைப்படுவதில் அர்த்தமில்லை. வாக்களித்த மக்களை இனியும் ஏமாற்றாது மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதே சிறப்பாக அமையும்.
No comments:
Post a Comment