Sunday, September 28, 2014

பிணை கைதிகளை தலை வெட்டி கொன்ற ஐஎஸ் தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது: எப்பிஐ தகவல்!

Sunday, September 28, 2014
வாஷிங்டன்::சிரியாவில் அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேரை தலையை துண்டித்து வெட்டிக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதியின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு போலீஸ் (எப்பிஐ) தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
 
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து 2 வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். அதில் அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே மற்றும் ஸ்டீவன் ஸோட்லாப் ஆகியோரை முகமூடி அணிந்த ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் தலையை துண்டித்து கொல்வது போன்ற கொடூர காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதே போல இங்கிலாந்து பிணைக் கைதியும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையில், அமெரிக்க பத்திரிகையாளர்களை தலையை வெட்டிக் கொன்ற தீவிரவாதியின் அடையாளம் தெரியவந்துள்ளதாக எப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமே தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன், அவனுடைய பெயர் போன்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இது தொடர்பாக ஐரோப்பிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆப்கனில் இருந்து வந்து லண்டனில் தங்கியிருந்த ஒருவன் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமான படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்காவுடன் இங்கிலாந்து படைகளும் இணைந்து தாக்குதல் நடத்துவது குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment