Tuesday, September 23, 2014
வாஷிங்டன்,: இதுவரை ஈராக்கில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, நேற்றிரவு முதல் சிரியாவில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீதும் குண்டு வீசி தாக்குதலை துவக்கியது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளனர். அவர்கள் அரசுகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான பொது மக்கள் பலியாகி வருகின்றனர். வன்முறைக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். கடந்த ஓரிரு நாளில் மட்டும் சிரியாவில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி மக்கள் அகதிகளாக துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா 50 நாடுகளின் கூட்டுப்படைக்கு தலைமையேற்று, ஈராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவிலும் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதையடுத்து அங்கும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 11ம் தேதி அறிவித்தார். அதன்படி, சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது நேற்றிரவு முதல் அமெரிக்கப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதலை துவக்கின.
சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகளும் அங்கம் வகிக்கும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர், சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் முக்கிய கேந்திரமாக திகழும் ராக்கா நகரத்தில் கட்டிடங்களை குறி வைத்து குண்டுகளை வீசினர். போர் விமானங்கள் குண்டுகளை பொழிந்தன. ஏவுகணைகள் ஏவப்பட்டன. தாக்குதல் குறித்த விவரமான தகவல்களை இப்போதைய சூழ்நிலையில் தெரிவிப்பது நல்லதல்ல என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி தெரிவித்தார்.
No comments:
Post a Comment