Thursday, September 18, 2014
சென்னை::சென்னையில் சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த புலிகளின் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் கடந்த 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். இலங்கை தமிழரான இவரை அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் மூளைச் சலவை செய்து பாக். உளவாளியாக மாற்றியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இலங்கையில் ஓட்டல் அதிபராக இருந்த அருண் செல்வராசன், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தவறான பாதைக்கு சென்று பாக். உளவாளியாக மாறியிருக்கிறார். கடந்த 2012–ம் ஆண்டு திருச்சியில் தமிம் அன்சாரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஜாகீர் உசேன் ஆகியோர் ஏற்கனவே பாகிஸ்தான் உளவாளிகளாக தமிழகத்தில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டினர். இவர்கள் 2 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார் கூட்டாளிகள் 4 பேரையும் கள்ள நோட்டுகளுடன் பிடித்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 5 மாதங்களாக தொடர்ந்து விசாரித்து 3–வது உளவாளியான அருண் செல்வராசனை பிடித்துள்ளனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலமாக ஏராளமான நிகழ்ச்சிகளை அருண் செல்வராசன் நடத்தியுள்ளார். அப்போது, பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், பாதுகாப்பு மிக்கதாக திகழும் துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அவர் புகுந்து படம் பிடித்துள்ளார்.
இந்த போட்டோக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்தபடியே பாகிஸ்தான் தூதராக அதிகாரிகளுக்கு அருண் செல்வராசன் அனுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களுககு முன்பு நடைபெற்ற ஆபரேஷன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகையையும் அருண் செல்வராசன் படம் பிடித்து அனுப்பியுள்ளார். இதன் மூலம் கடல் வழியாக ஊடுருவி மிகப் பெரிய தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு செயல்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அருண் செல்வராசனுடன், அவனது கூட்டாளிகள் 5 பேரும் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அருண் செல்வராசன் பணியாற்றியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அவரது கூட்டாளிகள் 5 பேரும் விடுதலை புலிகளாக இருக்கலாமோ? என்கிற சந்தேகமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களின் பின்னணி பற்றி அருண் செல்வராசனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
அருண் செல்வராசன் தன்னந்தனி ஆளாக நின்று மிகப்பெரிய அளவான சதி திட்டத்தை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அவருக்கு சென்னையில் முக்கிய பிரமுகர்கள் பலர் உதவிகள் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் அருண் செல்வராசன் தங்கி இருந்த போது புதிதாக பலரும் நண்பர்களாகியுள்ளனர்.இவர்களில் சிலர் அருண் செல்வராசனின் பின்னணி பற்றி தெரிந்த பின்னரும் நட்பை தொடர்ந்துள்ளனர். அது போன்று செயலில் ஈடுபட்டவர்கள் யார்–யார்? என்கிற பட்டியலும் சேகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நூற்றுக்கணக்கான கேள்விகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தயார் செய்து வைத்துள்ளனர்.
போலீஸ் காவலில் இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடைகாண அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே சி.பி.ஐ. தரப்பிலும், அருண் செல்வராசனிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி விடுதலையானவர்கள் மற்றும் சிறையில் இருப்பவர்கள் ஆகியோருடன் அருண் செல்வராசன் தொடர்பில் இருந்தாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்குதான் சி.பி.ஐ. அதிகாரிகள் மனு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு அதிகாரிகளின் போலீஸ் காவல் விசாரணை முடிந்த பின்னர், அருண் செல்வராசனிடம் புழல் சிறையில் வைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment