Thursday, September 18, 2014
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சி.டயஸ், முல்லைத்தீவு, வாவட்டி குளப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் முன்னிலையில் விவசாயிகளிடம் இந்த நிலங்களை ஒப்படைத்தார்.
இதனையடுத்து, இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில், பூஜையை மேற்கொண்ட விவசாயிகள், நிலத்தை பண்படுத்தி சிறு நிலப்பரப்பில் நெல் பயிரிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முழு விவசாய நிலங்களையும் பண்படுத்தி விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, இந்த நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக, மானிய உரம் மற்றும் விதை நெல் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உறுதியளித்தார்.
இராணுவத்தினர் வசமிருந்த கேப்பாப்பிலவு, வாவெட்டி குளம், இயங்கன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள 67 விவசாயிகளுக்கு சொந்தமான 320 ஏக்கர் விவசாய காணியும், விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இயங்கன்குளம் பகுதியிலுள்ள 32 விவசாயிகளுக்கு சொந்தமான 82 ஏக்கர் வயல் நிலமும், வாவெட்டிக்குளம் பகுதியிலுள்ள 34 விவசாயிகளுக்கு சொந்தமான 240 ஏக்கர் வயல் நிலமும் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment