Sunday, July 27, 2014

தொடர் தோல்வியை தழுவி வரும் புலி ஆதரவு தமிழ் தலைவர்களது எதிர்ப்பு அரசியல்!

Sunday, July 27, 2014
இலங்கை::இலங்கை அரசியல் வரலாற்றில் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்திலிருந்து இன்று வரை தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் நடத்திவரும் எதிர்ப்பு அரசியல் போராட்டங்கள் தொடர்ச்சியான தோல்வியையே சந்தித்து வருகிறது. கடந்த அறுபத்தைந்து வருடங்களாக வெறுமனே எதிர்ப்பு அரசி யலை முன்னெடுத்து வருவதன் காரணமாக அவ்வப்போது இன முறுகலுக்கு முகங்கொடுப்பதுவும் அதனால் தமிழ்ச் சமூகம் பின்னடைவைக் காண்பது வுமே வரலாறாக அமைந்துள்ளது. இது அன்றைய அஹிம்சா வழி போராட் டம் முதல் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரை தொடர்ந்து இன்று தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல் வரை தொடர் கதையாக உள்ளது.
 
தமிழ் அரசியல்வாதிகள் இனியும் இந்நிலையிலிருந்து மீளாதுவிட்டால் தமிழினத்தின் எதிர்காலம் சூனியமாகிவிடும். இந்நாட்டை ஆட்சி செய்கின்ற அதிகாரத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மையின அரசாங்கங்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு தமது பிரதேசங்களையும், தாம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துவதே இனிவரும் எதிர்காலத்தில் சரியானதொரு தெரிவான அமையும்.
 
இதுவரை எதிர்ப்பு அரசியலை நடத்தி வந்ததன் மூலமாக தமிழ் அரசியல் தலைமைகள் கண்ட வெற்றியோ அல்லது நிலைநாட்டிய சாதனையோ எதுவுமேயில்லை. விடுதலைப் புலிகளின் காலத்திற்கு முன்னரும் தமிழ் அரசியல்வாதிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்பு அரசியலை நடத்திவந்தனர். பின்னர் அப்பொறுப்பை புலிகளிடம் கையளித்தனர். அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது எதிர்ப்பைக் காட்டி வெற்றிகளைக் காணலாம் எனப் புறப்பட்டு இருந்ததையும் இல்லாமற் செய்தனர்.
 
இன்று அதே பழைய தமிழ் அரசியல்வாதிகள் சில புதிய முகங்களுடன் மீண்டும் தமது எதிர்ப்பு அரசியலை நடத்தி வருகின்றனர். தமது எதிர்ப்பு அரசியல் மூலமாக ஒரு தடவை மக்களை ஒருவித மாயைக்குள் தள்ளி வடமாகாண சபையை கைப்பற்றியுள்ளனரே தவிர கைப்பற்றிய அங்கு ஒரு நிர்வாகத்தை நடத்த முடியாது திக்குமுக்காடுகின்றனர். இதற்கு அவர்களது ஒத்துச் செல்லாத் தன்மையும் வரட்டு எதிர்ப்பு அரசியலுமே காரணமாக உள்ளன.
 
யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு கடந்த ஐந்து வருடங்களில் வட மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் வரையான நான்கு வருடங்களில் அரசாங்கம் அங்கு பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டது. இவர்களது தெரிவின் பின்னர் இப்போது அரசாங்கம் தேவையான அளவு நிதியை வழங்கினாலும் நிர்வாகத்தை நடத்த முடியாதுள்ளனர். அன்று அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியானதும் இவர்கள் இன்று நாடா வெட்டித் திறந்து வைக்கின்றனரே தவிர ஆட்சி பீடமேறி ஒரு வருடமாகியும் ஒருசிறு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.
 
அரசியல் தீர்வு பற்றிப் பேசி அதற்காக ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டே ஒரு வருடம் உருண்டோடி விட்டது. மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களில் அக்கறையில்லாதுவிடினும் தமக்கான ஆடம்பர வாகனங்கள், சொகுசு குடிமனைகள், அழகான அலுவலங்கள், உறவினர்களுக்கு உத்தியோகங்கள், தமக்குரிய பொலிஸ் பாதுகாப்பு என்பவற்றில் ஒருகுறையும் இல்லாது செம்மையாகவே செய்து வருகின்றனர். முதலமைச்சரை மக்கள் பார்வையிடுவது என்பது முடியாத காரியமாகவே உள்ளது. ஆர்ப்பாட்டங்களில் சந்திக்கலாம் என்றால் அவற்றில் முதலமைச்சர் பங்குபற்றுவதில்லை.
 
தமிழ்க் கூட்டமைப்பு இனியும் எதிர்ப்பு அரசியலை நடத்தாது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு ஒன்றினைக் கண்டு அதன் மூலமாகத் தமது மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். வடமாகாண ஆளுனரை மாற்றியே தீருவோம் என எதிர்ப்புக் காட்டி பல சூளுரைகளை தமிழ்க் கூட்டமைப்பு விடுத்து வந்தது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? அவரே அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆளுநராகப் பதவி வகிக்கப்போகிறார்.
 
இதனையே தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணக்கமாகப் பேசி நடந்திருந்தால் தமது கோரிக்கையில் வெற்றியைக் கண்டிருக்கலாம். இதுபோன்றே இன்று வடக்கில் இடம்பெறும் ஒவ்வொரு விடயமும் தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலால் எதிர்மாறாக நடந்து வருகிறது. ஒரு சிறு குறுநில மன்னர்கள் போல நடந்து கொண்டு அவர்கள் மத்திய அரசாங்கத்தை விரும்பியவாறு ஆட்டிப் படைக்கலாம் என நினைத்து வருகின்றனர்.
 
தமது இந்த செய்கைகளுக்கு சர்வதேசம் தொடர்ந்தும் கை கொடுக்கும் என்பது இவர்களது நினைப்பாக உள்ளது. ஆனால் பல உலக நாடுகள் இப்போதே இவர்களைக் கைவிட்டுள்ள நிலையே காணப்படுகிறது. யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு எத்தனையோ நாடுகளுக்குச் சென்று அரசாங்கத்தைக் காட்டிக் கொடுப்பது போன்று பொய்யுரைத்து வந்தது. ஆனால் அவை எவற்றாலும் எவ்விதமான பலனும் ஏற்படவில்லை. மாறாக உள்ளூரில் அரசாங்கத்திற்கு மக்களது ஆதரவு பெருகியதுடன் அரசாங்கம் சகல தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது.
 
தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தை விமர்சித்து எதிர்ப்பு அரசியலை நடத்தி தமிழ் மக்களுக்கு எவ்விதமான விமோசனத்தையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பது இப்போது தெட்டத் தெளிவாகிவிட்டது. அரசாங்கம் தெற்கில் அந்தளவிற்கு வலுவான மக்கள் ஆதரவு பெற்றுக் காணப்படுகிறது. அரசாங்கத்தை எவரும் பயமுறுத்தி அல்லது அடிபணிய வைத்து தமது காரியத்தைச் செய்யலாம் என்பது இனிவரும் காலத்தில் இயலாததொரு விடயமாகிவிட்டது.
 
இந்நிலையில் இனியும் எதிர்ப்பு அரசியலால் தமது மக்களுக்கு சேவை செய்யலாம் எனும் மாயையிலிருந்து தமிழ்த் தலைமைகள் விடுபட வேண்டும். குறிப்பாக தமிழ்மக்களின் ஓரளவு ஆதரவைப் பெற்று வட மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலமாக தமது மக்களுக்குச் சேவை செய்ய முன்வர வேண்டும். அரசாங்கமும் பேச்சு நடத்தத் தாமும் தயார் என்ற அறிவிப்பை தமிழ்க் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
இனியும் எதிர்ப்பு அரசியலை நடத்தினால் தமிழ்க் கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக் குறியாகிவிடும். தமிழ் மக்கள் அந்தளவிற்கு வெறுப்படைந்துள்ளார்கள் என்பதே உண்மை. எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்கள் வாழ்விலும், தமிழ் அரசியலிலும் தொடர் தோல்விகளையே தந்துள்ளது என்ற உண்மையை தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment