Thursday, July 10, 2014
புது டெல்லி::பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். இதில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராணுவத்துறை உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் 336 இடங்களை பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியதை அடுத்து பிரதமராக நரேந்திரமோடி கடந்த மே மாதம் 2 6ம் தேதி பொறுப்பேற்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது மக்களவையின் முதல் கூட்ட தொடர் ஜூன் 4ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று முன்தினம் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரயில்வே துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். 58 புதிய ரயில்களுடன் பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார். இதை தொடர்ந்து மக்களவையில் நேற்று காலை பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து நரேந்திர மோடி அரசின் முதல் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கு மானியம், இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிப்பு போன்றவற்றை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்க்கும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே போல் தொலைத் தொடர்பு துறை கட்டுப்பாட்டு ஆணையத்தை மாற்றியமைப்பது, ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் நேரடி தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி, அரசு நிறுவனங்கள் பங்குகளை விற்பது போன்றவை பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு, கலால் மற்றும் சுங்க வரிகளில் மாற்றம் உள்ளிட்ட வரி சீர்திருத்தம் போன்ற பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகும் என தெரிகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment