Monday, June 2, 2014

33 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

Monday, June 02, 2014
சென்னை::இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 33 அப்பாவி தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு நேற்று முன்தினம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகுகளில் சென்ற இவர்கள் கச்சத்தீவு தலைமன்னாருக்கு இடையே நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது நேற்று அதிகாலையில் திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு மின்னல் வேகத்தில் வந்து ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
 
பின்னர் மீனவர்களின் படகுகளில் ஏறி குதித்த சிங்கள கடற்படையினர் அதில் இருந்த வலைகளை அறுத்து எறிந்து கடலில் வீசினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கொள்ளையடித்து தங்களது படகுகளில் அள்ளிப் போட்டுக் கொண்டனர். சில மீனவர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. பின்னர் தமிழக மீனவர்கள் 33 பேரையும் 7 படகுகளுடன் அவர்கள் பிடித்து சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். உடனடியாக இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த பல ஆண்டுகளாக மீனவர்கள் படும் அவதிகளை முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டியுள்ளார். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது,
 
45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து ஜூன் 1ம் தேதியன்று மீன் பிடிக்கும் சீசன் துவங்கி உள்ளது. ஆனால் சீசன் துவங்கிய முதல் நாளிலேயே 33 இந்திய மீனவர்கள் அதாவது தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது 7 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை மிகுந்த வேதனையோடும், கவலையோடும் இந்த கடிதம் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் மீனவர்களை கைது செய்யும் சம்பவம் 76 முறை நடந்துள்ளது. மீனவர்களை தாக்கி கொடுமைப்படுத்தும் சம்பவம் 67 முறை நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டில் இந்த பிரச்சினைக்கு ஒரு வலுவான தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்று வலியுறுத்தி முன்னாள் பிரதமருக்கு நான் பல கடிதங்கள் எழுதினேன். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை.
 
இந்த நிலையில் 31.5.2014 அன்று 7 விசைப்படகுகளில் ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் 33 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் 1ம் தேதி அதிகாலையில் கைது செய்து தலைமன்னாருக்கு பிடித்து சென்றுள்ளனர். இது போன்ற கடத்தல் சம்பவங்களும், கைது சம்பவங்களும் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்போது மத்தியில் ஒரு புதிய அரசு அமைந்திருக்கிறது. இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் இலங்கையுடன் ஒரு நல்ல உறவு ஏற்படும். மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது என்றெல்லாம் மீனவர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
பாக். ஜலசந்தியில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பரம்பரை உரிமை. அவர்களது வாழ்வாதாரமே அதில்தான் உள்ளது. ஆனால் இலங்கை கடற்படை மீனவர்களை கொடுமைப்படுத்தி அடிக்கடி கைது செய்கிறது. இதற்கு காரணம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தான். கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் அது தாரைவார்க்கப்பட்ட பிறகு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவது திரும்பத் திரும்ப நடக்கிறது. இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், படகுகளை தாக்கி மீன்களை கொள்ளையடிக்கிறார்கள். மேலும் தமிழகத்தின் ஏழை மீனவர்களை அடிக்கடி கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இது அன்றாடம் நடக்கின்ற  சம்பவமாகி விட்டது. இதற்கு முடிவு கட்டத்தான் இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
 
2014ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் முதல் கட்ட பேச்சு நடந்தது. பிறகு கொழும்பு நகரில் மே 12ம் தேதி 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தமிழக அரசு இதுபோன்ற ஒரு சாதகமான அணுகுமுறையை மேற்கொண்டும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானது. அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. இதற்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் பலமுறை எடுத்து சொன்னோம். ஆனால் அவர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இந்த பிரச்சினையை பொருட்படுத்தவும் இல்லை. அதனால்தான் இலங்கை கடற்படைக்கு இத்தனை துணிச்சல் வந்து அப்பாவி மீனவர்களை கொடூரமான முறையில் தாக்குகிறார்கள். எனவே தற்போதைய அரசாவது இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையால் தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதால் இந்திய அரசு இனியும் இதை சகித்து கொள்ளக் கூடாது. அவர்களால் நமது மீனவர்கள் தாக்கப்பட கூடாது. எனவே வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பாக். ஜலசந்தியில் லட்சக்கணக்கான தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பி இருக்கிறார்கள். எனவே தொடர்ந்து நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
 
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால்தான் இந்த பிரச்சினை பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. இப்போது பதவியேற்றுள்ள புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த உணர்ச்சிபூர்வமான பிரச்சினையில் ஒரு தீர்க்கமான முடிவெடுத்து செயல்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே இந்த விஷயத்தில் நீங்கள்(பிரதமர்) நேரடியாக தலையிட்டு வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 33 மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 7 படகுகளுடன் 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையின் வசம் உள்ளனர். எனவே இவர்களை விடுவிக்க இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment