Wednesday, April 30, 2014
சென்னை::தென்னிந்தியாவின் பங்கு வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தலைமையகமாக விளங்கும் சென்னை பங்குச் சந்தை 76 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. ஆனால் வரும் மே மாதம் 30ஆம் தேதியுடன் இந்த மையத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்படலாம் என்ற செபியின் எச்சரிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி குறிப்பிட்டபடி நிகர மதிப்பு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு தேவைகளை சென்னை பங்குச் சந்தை நிறைவேற்றத் தவறியதால் இந்த முடிவு ஏற்படக்கூடும் என்று தெரிகின்றது. இன்னும் சில வாரங்களுக்குள் சென்னை பங்குச் சந்தை நிர்வாக அமைப்பில் ஏதேனும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டாலொழிய செபியின் முடிவை மாற்றமுடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதமே செபி அமைப்பு, சென்னை பங்குச் சந்தை இந்த ஆண்டு மே இறுதிக்குள் ஆண்டு வர்த்தகமாக 1000 கோடி ரூபாயையும், நிகர மதிப்பாக 100 கோடி ரூபாயையும் கணக்கில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இல்லையெனில் வர்த்தகத்தை தொடருவதென்பது முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. செபி குறிப்பிட்ட இரண்டு நிலையையுமே சென்னை பங்குச் சந்தை இன்னும் எட்டவில்லை. மேலும் இதற்கான காலக்கெடு முடிவடைய வெறும் 30 நாட்களே இருக்கின்ற நிலையில் வர்த்தகம் நிறுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சென்னை மையத்தின் இந்த நிலை குறித்த ஒரு முக்கியக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மே மாத இறுதியில் பங்குதாரர்களுக்கான சிறப்பு பொதுக் கூட்டத்தைக் கூட்டி பங்குச் சந்தையின் புதிய தேவைகளும், பிராந்திய மையத்தால் நிறைவேற்ற இயலாத குறியீடுகளாக அதிகாரிகள் கருதுவதுமான முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் மனித வளம் போன்றவை குறித்து விவாதித்து தன்னார்வ பணிநிறுத்தத்தைத் தொடங்கக்கூடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பொதுக் குழு கூட்டம் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட நிர்வாக இயக்குனர் ராமநாத எம்.கோட்டகல் இதுகுறித்த நடவடிக்கைகளை விளக்க சில நாட்கள் தேவை என்று கூறியுள்ளார். மற்ற பிராந்திய மையங்களுடன் இணைந்து செயல்படவும் சென்னை பங்குச் சந்தை முயற்சித்தது. இருப்பினும், இந்த நடவடிக்கை பலனளிக்கவில்லை என்று பங்குச் சந்தையின் மற்றொரு இயக்குனர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment