Wednesday, February 26, 2014

மனித உரிமை விசாரணைகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது: பேராசிரியர் பீரிஸ்!

Wednesday, February 26, 2014
இலங்கை::ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
 
வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் 19752014 என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
த நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் மலிந்த செனவிரட்ணவால் எழுதப்பட்ட இந்நூல், இலங்கையின் போர் தொடர்பான புகைப்படங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது.
 
இந்நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் பீரிஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் ஒரே மாதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை. இலங்கை மீது மட்டுமல்லாது ஏனைய சில நாடுகள் மீதும் மனித உரிமை விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்நாடுகளும் அச்சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொண்ட நாடுகளாகவே உள்ளன. இலங்கை போருக்குப் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், நாட்டின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைப்பது நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
 
சர்வதேச நிறுவனங்கள் நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக ஒரே மாதிரியான அணுகுமுறையையே கொண்டிருக்க வேண்டும். தேர்வுகளின் அடிப்படையிலான அணுகுமுறையினைக் கொண்டிருக்கக் கூடாது.
 
மனித உரிமைகள் மீறப்பட்ட விடயங்களில் அவை தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேவேளை, ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் பிரச்சினைகளது உண்மைத் தன்மையினையும், அவற்றின் உள்ளீடுகளையும் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
 
உந்நாட்டின் பிரச்சினைகளில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு காணப்படக்கூடாது. நம் நாட்டினை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஐ.நா. சபையின் சகல திணைக்களங்களினதும் தலைமை அதிகாரிகளையும் நாட்டிற்கு அழைத்து எமது உண்மை நிலையினை வெளிக்காட்டினோம். நாம் எதனையும் மறைக்கவில்லை. அத்துடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை ஐ.நா. பொறிமுறையுடன் இணைந்தே செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment