Thursday, January 30, 2014

82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை விளக்கம்: தற்போதைய நிலைமை, LLRC பரிந்துரை அமுலாக்கம்: மனித உரிமை முன்னெடுப்புகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜP.எல், நிமல் சிறிபால டி சில்வா விரிவாக எடுத்துரைப்பு!

Thursday, January 30, 2014
இலங்கை::உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், 82 நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார். புதுடில்லியை வதிவிடமாகக் கொண்டபடி இலங்கையிலும் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் தூதுவர்களையே அமைச்சர் இவ்வாறு சந்தித்துப் பேசியுள்ளார்.
 
அபுதாபியிலிருந்து நேரடியாக புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் தற்போதைய நிலைமை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுலாக்கம், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
 
இச்சந்திப்பில் அமைச்சர் பீரிஸஞிடன் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு வின் தலைவரும், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்துகொண்டார்.
 
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஐக்கிய அமெரிக்க இராச்சியம் கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய மற்றும் 2014ஆம் மார்ச் மாதம் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ள பிரேரணை குறித்தும் அமைச்சர்கள் இச்சந்தர்ப்பத்தில் இராஜதந்திரிகளுடன் உரையாடினார்கள். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா தொடர்ச்சியாக இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
மேலும் இலங்கைக்குமான இணைத்தூதுவர்கள் என்ற வகையில் இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து குறுகிய கடந்த 4 ஆண்டு காலப் பகுதிக்குள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஊடாக அடுத்தடுத்த வருடங்களில் பல அழுத்தங்கள் வந்தபோதும் எமது அரசாங்கத்தினால் சளைக்காது முன்னெடுக்கப்பட்டுவந்த சாதனைகளை உலகிற்குப் பிரதி பலிக்க வேண்டுமெனவும் அமைச்சர் பீரிஸ் இராஜதந்திரிகளைக் கேட்டுக் கொண்டார்.
 
இலங்கையில் 2013ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாடு பற்றிக் குறிப்பிடுகையில், அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்தபோது தாங்கள் அதுவரை இந்நாட்டைப்பற்றி கேள்வியுற்றிருந்தமையிலும், அனைத்து அம்சங்களும் வித்தியாசமாக இருந்ததனை தங்களது பொது அபிப்பிராயமாகக் கொண்டிருந்தனர். அத்துடன், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் ஹோட்டல்களின் தரம், மக்களின் தன்னம்பிக்கை, 7.8சதவீத பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை நேரில் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.
 
பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளுக்கு மேலதிகமாக பொதுநலவாய வர்த்தகப் பேரவைக்கு 87 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமையையும் அமைச்சர் பீரிஸ் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தார்.
 
மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டு முதல் இதுவரை எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லையெனத் தெரிவித்த அமைச்சர், பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்ந்திருந்தால் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்ற நிலைமை ஏற்பட்டிருக்க வாய்ப்பு கிட்டியிருக்காது.  பயங்கரவாதம் இலங்கையில் மட்டுமன்றி முழு பிராந்தியத்திலிருந்தும் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
 
மோதல்களின் போது அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய 14,300 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூகத்தில் அவர்களும் கெளரவமாக வாழ்வதற்கு ஏற்றவகையில் வாழ்வாதாரத் தொழில்களும் ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அதற்குப் பின்னர் ஆயுதம் ஏந்தவும் இல்லை, அதற்காக முயற்சிக்க வுமில்லை.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாட்டில் ஏனைய மாகாணங்களைப் போன்றே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் நான்கு அரசாங்கங்களும், நான்கு ஜனாதிபதிகளும் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் யாராலும் செய்யப்படாத ஒன்றை எமது தற்போதைய அரசாங்கமே 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தி முடித்திருந்தது.
 
வெற்றி அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்காத போதிலும், வடக்கு மாகாண மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தியிருந்தது. மீள்குடியேற்றம், மீள் கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு ஒழுங்கு முறைகளுக்கு இதுவே அடிப்படையான அம்சம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
மோதல் காலத்தில் சரிவர இயங்காத பாடசாலைகள் தற்போது அரசாங்கத்தின் உதவியுடன் மீண்டும் சிறப்பாக செயற்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
 
புள்ளிவிபரவியல் திணைக்களம் வடக்கில் கணக்கெடுப்பொன்றை முன்னெடுத்து வருகின்றது. மோதல்களின் போது அழிவுற்ற காணி பதிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக காணி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்துக்கும் மேலாக இலங்கை சர்வதேச நாடுகளுடன் சிறப்பான உறவுகளைப் பேணி வருவதுடன், எச்சந்தர்ப்பத்திலும் நாடுகளுடனான நட்புறவிலிருந்து பின்வாங்கவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment