Monday, December 30, 2013
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவகையிலும் சவாலானவர் அல்ல என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். எமது நாட்டு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனேயே உள்ளனர். அவரின் வேலைத்திட்டங்களை எதிர்பார்த்துள்ளனர். மக்களை பொறுத்தவரை கதாபாத்திரங்கள் என்பது முக்கியமல்ல. மாறாக யார் என்ன கொள்கையில் உள்ளனர் என்பதே முக்கியமாகும்.
அந்த கோணத்தில் நோக்குகையில், ஜனாதிபதி மஹிந்தவின் கொள்கைகளை மக்கள் முழுமையாக ஏற்றுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், அவை குறித்து மேலதிகமாக எந்த விடயமும் தெரியவில்லை. ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவகையிலும் சவாலானவர் அல்ல. இதனை உறுதியாக கூற முடியும்.
மக்களை பொறுத்தவரை கதாபாத்திரங்கள் என்பது முக்கியமல்ல. மாறாக முன்வைக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களும் கொள்கைகளுமே முக்கியமானவையாகும். அந்தவகையில் பார்க்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேலைத்திட்டங்களையும், கொள்கைகளையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவரின் வேலைத்திட்டங்களை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அவற்றுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் முழுமையாக விரும்புகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment