Thursday, December 5, 2013

இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில்லை: கடற்படை அதிகாரி அமர் கே.மகாதேவன்!

Thursday, December 05, 2013
சென்னை::இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில்லை என கடற்படை அதிகாரி தெரிவித்தார். 1971ம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக டிசம்பர் 4ம் தேதி கடற்படை வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா சென்னை போர் நினைவு சின்னம் அருகில் நேற்று நடைபெற்றது. இதில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கான லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.பிள்ளை, ஆவடி ஏர் கமாண்டர் பப்பட், தமிழ்நாடு மற்றும் புதுவை கடற்படை பொறுப்பு அதிகாரி அமர் கே.மாகாதேவன், கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை ஐஜி ஷர்மா உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, அதிகாரிகள் அனைவரும் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக போர் நினைவு சின்னம் அருகில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமர் கே.மகாதேவன் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள், இந்திய கடற்பகுதிகளுக்குள் தாக்கப்படுவதில்லை. எல்லையை தாண்டும்போது சில நிகழ்வுகள் நடைபெறுகிறது. நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த கப்பல்படை நவீனப்படுத்தப்படுகிறது. இந்திய கடல் படை, கடலோர காவல் படை போன்றவை தீவிர ரோந்துகளின் மூலம் இந்திய கடல் எல்லைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment