Thursday, December 5, 2013

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மத்திய படை பாதுகாப்பு 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

Thursday, December 05, 2013
சேலம்::ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், துணை ராணுவப்படை பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையத்திற்கு நேற்று நள்ளிரவில் கொண்டு வரப்பட்டன. அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைத்து மத்திய படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரிந்து விடும். ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 89.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. பின், அவை வாக்கு எண்ணும் மையமான சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரிக்கு லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. ஏற்காடு குண்டூர் வாக்குச்சாவடியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதல் இயந்திரமாக நேற்றிரவு 8.10 மணிக்கு வந்து சேர்ந்தது.
 
அதை அதிகாரிகள் சோதனையிட்டு, சீல் வைத்து அறையில் பாதுகாப்பாக வைத்தனர். இதையடுத்து, தொகுதியின் அனைத்து இடங்களில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நள்ளிரவு வரை லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. அவற்றை அதிகாரிகள் சரிபார்த்து அறைக்குள் வைக்கும் பணி அதிகாலை 5 மணி வரை நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வெளியே கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 24 மணி நேரமும் கணினி மூலம் தேர்தல் அதிகாரிகள், போலீசார் கண்காணிக்கின்றனர். வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை உள்பட உள்சுற்றில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு 45 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அதற்கு வெளியே 45 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், கல்லூரியை சுற்றி 70 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், கல்லூரிக்கு வெளியே மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 10 மணியளவில் எந்த கட்சிக்கு வெற்றி என தெரிந்து விடும். மதியத்துக்குள் இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருநங்கைகள் வாக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சபாபதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஏற்காடு இடைத்தேர்தலில் மொத்தம் 89.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,40,290. இதில் 2,14,444 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 1,05,620 பேரும், பெண்கள் 1,08,820 பேரும், திருநங்கையர் 4 பேரும் வாக்களித்துள்ளனர்‘‘ என்று தெரிவித்துள்ளார்.
 
21 சுற்று எண்ணிக்கைமாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மகரபூஷணம் கூறுகையில், ‘ஏற்காடு தொகுதி வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கும். மொத்தம் 14 டேபிள்களில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. கடைசியாக, 21வது சுற்றில் 10 டேபிள்களில் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையில் 52 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறையை தினசரி மாவட்ட கல்வி அலுவலர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறும்’ என்றார்

No comments:

Post a Comment