Thursday, December 5, 2013

30 ஆண்டுகள் நடைபெற்ற போர் முடிந்து விட்டது என்பதற்காக இராணுவத்தை கலைத்து விட முடியாது: நிமால் சிறிபால டி சில்வா!

Thursday, December 05, 2013
இலங்கை::30 ஆண்டுகள் நடைபெற்ற போருக்கு பின்னர் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி நாட்டில் வாழும் உரிமையை இராணுவத்தினர் உறுதிப்படுத்தியதாகவும் உயிர், உடல், இரத்தத்தை தியாகம் செய்து தாய் நாட்டை காப்பாற்றிக் கொடுத்த அவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

போர் முடிந்து விட்டது என்பதற்காக இராணுவத்தை கலைத்து விட முடியாது. அவர்களின் தொழிலை பாதுகாக்க வேண்டும். அவர்களின் சேவையை தேசிய பொருளாதாரத்திற்கான பங்களிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பாடுமாயின் அதனை முறியடிக்க புலனாய்வுப் பிரிவு, இராணுவ கட்டமைப்பு என்பன பலப்படுத்தப்பட வேண்டும்.

கடற்படை என்பது போரிடுவதற்கு மட்டுமல்ல. கடற்படையை மறுசீரமைப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் நபர்களை தடுப்பதில் அவர்கள் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

கடல் கொள்ளையர்கள் தொடர்பான பிரச்சினையில் கடற்படையினர் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தை சேர்ந்த பலர் ஐ.நா அமைதி காக்கும் படையில்
இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் இலங்கை அந்நிய செலாவணியை ஈட்ட முடிந்துள்ளது.

அத்துடன் சுற்றுலாத்துறையிலும் உள்நாட்டு விமான சேவையிலும் விமானப்படையினர் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றார்.
 
 

No comments:

Post a Comment