Friday, November 29, 2013
இலங்கை::தமிழ் மக்கள் உட்பட ஏனைய சமூகத்தினர் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மக்களின் உரிமைகளை முழுமையாக பாதுகாப்பதற்கு அரசாங்கம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டு கோள் விடுத்தார். வரவு - செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நோக்குடனே புலிகளை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பை வழங்கின. இவ்வாறு ஒத்துழைத்த சர்வதேச சமூகத்திற்கு அரசு என்ன பதிலை வழங்கப்போகின்றது என்று நான் இந்த சபையில் கேட்கவிரும்புகிறேன்.
பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரண்டும் மிக முக்கியமானது. இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பொறுப்புக் கூறுதல் இல்லாவிட்டால் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனவே தமிழ் மக்களின் ஏற்றுக் கொள்ளும், தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு சிறந்த தீர்வை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொது நலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை வகித்த நிலையிலேயே இந்த வரவு - செலவு திட்டத்தை சமர்பித்துள்ளார்.
இந்த தலைமை பொறுப்பு வகிப்பதன் மூலம் அவருக்கு மேலும் பாரிய பல பொறுப்புக்கள் உள்ளன, இந்நிலையில் இந்த தலைமைத்துவத்தின் மூலம் சிறந்த ஒரு அனுகூலமான முடிவை தரும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment