Friday, November 29, 2013

இந்திய கடல் எல்லையை தாண்டும் இலங்கை மீனவர்கள் : அனுமதி கோரும் இலங்கை அரசால் புது சர்ச்சை!

Friday, November 29, 2013
சென்னை::தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடரும் நிலையில், "இந்திய கடல் எல்லைக்குள் வழிப்போக்கர்களாக, இலங்கை மீனவர்களை அனுமதிக்க வேண்டும்' என, இலங்கை அரசு கோரியுள்ளது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச எல்லையைத் தாண்டி, வழி தவறிச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இது, தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சிறையில் உள்ள, 80க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; பறிமுதல் செய்து வைத்துள்ள விசைப்படகுகளையும், விடுவிக்க வேண்டும்' என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
 
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புக்களும், பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், "அரபிக் கடலின், சர்வதேச எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்களை, இந்திய கடல் எல்லை வழியாக, வழிப்போக்கர்களாக செல்ல அனுமதிக்க வேண்டும்' எனக் கேட்டு, இலங்கை அரசு, இந்திய தூதரிடம் கடிதம் கொடுத்துள்ளது. இது, புதிய சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது. "இந்திய கடல் எல்லைக்குள் வந்தால், அத்து மீறலாகவே கருதப்படும். அவ்வாறு செல்வோரை கைது செய்யப்படுவர். இலங்கை அரசின் கோரிக்கை குறித்து, வெளியுறவு அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்' என, கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மீனவ அமைப்புகள், "இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்கலாம்' என, தெரிவித்துள்ளன.

தேசிய மீனவர் பேரவை பொதுச் செயலர் இளங்கோ கூறியதாவது: இலங்கையில் இருந்து, மீன்பிடி கப்பல்கள், அரபிக்கடல் செல்ல நீண்ட தூரம் சுற்ற வேண்டும். இந்திய கடல் எல்லை வழியாக சென்றால், தூரம் குறையும். அதனால், இலங்கை மீன்பிடி கப்பல்கள், இந்திய கடல் எல்லையில் வழிப்போக்கர்களாக சென்று வந்தனர். சமீபத்தில், தமிழக மீனவர்கள் தாக்குதலால், நம் கடலோர காவல் படையும் கெடுபிடி செய்து வருகிறது. இதனால், இலங்கை அரசு இப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்திய கடல் பொருளாதார மண்டலத்திற்குள், 450 வெளிநாட்டு கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதி அளித்துள்ளோம். அது போன்று, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, இந்திய கடல் எல்லையில், வழிப்போக்கர்களாக செல்ல அனுமதிக்கலாம். அதுபோன்று, இரு நாடுகளிலும் மீனவர்கள் சிறைபிடித்தல் சம்பவங்களுக்கும் தீர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆண்டன் கோமஸ் கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில், இந்திய கடல் எலைக்குள் வழிப்போக்கர்களாக செல்ல அனுமதிக்கலாம்; நமக்கு அவர்கள் எதிரிகள் அல்ல. அதற்காக, பன்னாடு நிறுவன பெரிய மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி அளித்து விடக்கூடாது.
தனுஷ்கோடி தலைமன்னாருக்குமான இடைவெளி, 19 கடல் மைல் தூரம் தான். இதில், நமக்கு, 8 கடல் மைல் தூரமும், இலங்கைக்கு, 11 கடல் மைல் தூரமும் என, பிரிக்கப்பட்டுள்ளது. குறுகிய கடல்பகுதி என்பதால், இருநாட்டினருக்கும் மீன்பிடி உரிமம் வேண்டும்; இவ்வாறு செய்வதால், இரு நாட்டு மீனவர்களும் கைதாகும் நிகழ்வுகள் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார். இப்படி பல்வேறு கருத்துக்கள் உள்ள நிலையில், இலங்கை அரசின் இந்த கோரிக்கை, மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment