Tuesday, October 01, 2013
இலங்கை::வடமாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை நேரம் முற்பகல் இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க் கிழமை வழங்கி வைத்தார். ஆளுநருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பில் நியமனக்கடிதத்தை இன்று வழங்குவது என முடிவாகியது. இதன்மூலம் வடக்கு முதல்வராக விக்னேஸ்வரன் அரசினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற க.வி.விக்னேஸ்வரனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சராக ஏகமனதாகத் தெரிவுசெய்திருந்தனர்.
இது தொடர்பான கடிதம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு அனுப்பப்பட்டு அவரும் அதனை ஏற்றுக்கொண்டு பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். அரசமைப்புச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாண முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தையும், நான்கு அமைச்சர்களுக்கான நியமனக் கடிதங்களையும் மாகாண ஆளுநரே வழங்க வேண்டும்.
இதனடிப்படையில் வடக்கு ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை மட்டும் இன்று கையளித்துள்ளார். அமைச்சர்கள் பெயர் பட்டியல் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டதன் பின்னராக அமைச்சர்களதும் நியமனக்கடிதங்கள் ஆளுநரால் வழங்கப்படும். அதன் பின்னரே அனைவரும் பதவிப் பிரமாணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment