Monday, September 2, 2013

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு விரைவில் நிரந்தர தீர்வு: ஜி.கே.வாசன் பேட்டி!

Monday, September 02, 2013
திருச்சி::இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார். மத்திய மந்திரி ஜி.கே.வாசன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேது சமுத்திர திட்டத்தை உறுதியோடு நடை முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால் தமிழக அரசு அதற்கு தடங்கல் ஏற்படுத்தும் வகையில் பல காரணங்களை கூறி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

அதற்கு முன் தமிழக அரசு கூறி உள்ள தவறான காரணங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும். சேது சமுத்திர திட்டம் தென் மாவட்ட மக்களின் கனவு திட்டம் ஆகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கியமான திட்டம் ஆகும். குறிப்பாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகமுக்கியமான திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தை உறுதியோடு செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிலும் நல்ல நிலை ஏற்படும் என்று கருதுகிறோம். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தான் தமிழக காங்கிரசார் விரும்புகிறார்கள். இதற்காக பிரதமரையும் மத்திய வெளியுறவு துறை அமைச்சரையும் சந்தித்து பேசி வருகிறேன்.

இலங்கை அதிகாரிகள் வட்டத்திலும் இது பற்றி இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் பேசி வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினையில் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறேன். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு மத்திய அரசு ஆர்டர்கள் கொடுப்பது இல்லை.

ரஷ்யாவில் இருந்துதான் துப்பாக்கிகளை இறக்குமதி செய்கிறார்கள் என தொழிற்சங்கத்தினர் புகார் கூறி வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து நான் டெல்லி சென்றதும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி அந்தோணியை சந்தித்து பேசி ஆணைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், என்ஜினீயர் காளீஸ்வரன், கராத்தே முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment