Wednesday, July 3, 2013

லாரிகளில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம், வைரம் யாருக்கு சொந்தம்? மர்மம் நீடிப்பு: போலீஸ் அதிர்ச்சி!!

Wednesday, July 03, 2013
மும்பை::மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 4 லாரிகளில் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்க, வைர நகைகள் யாருக்கு சொந்தமானது, அதை அனுப்பியவர்கள் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத்துக்கு பெருமளவு பணம் கடத்தப்படுவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு புலனாய்வு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், மும்பையில் ஹவாலா நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த 4 லாரிகளை தேசிய புலனாய்வு மற்றும் வருமானவரித் துறையின் புலனாய்வு அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர். அவற்றில் மூட்டை மூட்டையாக கரன்சி நோட்டுகளும் தங்கம் மற்றும் வைர நகைகளும் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரிகளில் இருந்த 47 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். 20 பேர் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட பண மூட்டைகள் தெற்கு மும்பையில் பல்லார்டு எஸ்டேட் சிந்தியா ஹவுசில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மூட்டைகள் பிரிக்கப்பட்டது. 150 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளாக இருந்தன. இன்று காலை வரை பணம் எண்ணும் பணி நீடித்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம், வைரத்தின் மதிப்பு ரூ.2500 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. பணம் வைக்கப்பட்டுள்ள சிந்தியா ஹவுஸ் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பது யார், பணம், நகைகளை அனுப்பியது யார், அவை யாருக்கு சொந்தம் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இவ்வளவு பெரிய அளவில் பணம், நகைகள் சிக்கியிருப்பது புலனாய்வு அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment