Sunday, June 30, 2013

யாழ்.வர்த்தகரிடம் பொலிஸாரைப் பயன்படுத்தி கப்பம் பெற்ற நபர் தொடர்பான விசாரணையினை: யாழில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று வவுனியா செல்கின்றது!

Sunday, June 30, 2013
இலங்கை::யாழ்.வர்த்தகரிடம் பொலிஸாரைப் பயன்படுத்தி கப்பம் பெற்ற நபர் தொடர்பான விசாரணையினை நடத்துவதற்கான யாழ்ப்பாணப் பொலிஸ் விசேட குழு வவுனியா செல்லவுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
 
மேற்படி கப்பம் பெற்ற சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளாரே தவிர வர்த்தகரிடம் பெறப்பட்ட சம்பவத்திற்கும் பொலிஸ் அதிகாரிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை 10.30 மணிக்கு யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், யாழ்.நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் ஈசட் மூலம் கம்பம் பெற்றுள்ளார்.
 
இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இரண்டு பிரிவாக விசாரணை நடாத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது.
 
குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாரா? வர்த்தகரிடம் கப்பம் பெறப்பட்ட சம்பவத்தில் பொலிஸாருக்குத் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்.நகரில் வர்த்தகரிடம் கப்பம் பெறப்பட்டது தொடர்பில் இரண்டு பிரிவாக நடாத்தப்பட்டு வந்த விசாரணைகள் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது.
இச்சம்பவத்தில் கைத்தொலைபேசியை வர்த்தகரிடம் கொண்டு சென்று கொடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ் இச்சம்பவத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
 
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும் கப்பம் பெற்ற சம்பவத்தில் சம்பந்தம் இல்லை. வவுனியாவில் இருந்து பொலிஸ் பொறுப்பதிகாரி என்று கூறிய நபர் ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு சம்பவ தினத்தில் யாழ். நகரில் நடமாடும் பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் அதிகாரியின் கைத் தொலைபேசி இலக்கத்தினை கேட்டுள்ளார்.
இதற்கிணங்க யாழ்.பொலிஸ் நிலையத்தில் உள்ள உத்தியோகஸ்தர்களும் கைத் தொலைபேசி இலக்கத்தினையும் கொடுத்துள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட குறித்த நபர், தான் பெற்றுக் கொண்ட கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, தான் பொலிஸ் உயர் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
 
மேலும் எதிரில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளரிடம் தொலைபேசியைக் கையளிக்குமாறு கூறி கப்பம் பெற்றுள்ளார். இதற்கும் கைத்தொலைபேசியினை வர்த்தகரிடம் கொடுத்த பொலிஸாருக்கும் கப்பம் பெற்ற சம்பவத்தில் தொடர்பு இல்லை.
வவுனியாவில் இருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபரைக் கண்டுபிடிக்க யாழ்ப்பாணத்தில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று வவுனியா செல்லவுள்ளது. மிக விரைவில் மேற்படி கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment