Monday, April 15, 2013

குற்றங்களை விசாரிப்பதில் மாநில அரசை கேட்காமல் சி.பி.ஐ. தலையிடகூடாது: முதல்-மந்திரிகள் மாநாட்டில் ஜெயலலிதா உரை!

Monday, April 15, 2013
புதுடெல்லி::போலீஸ் நிர்வாகத்தை சீர்அமைப்பது தொடர்பான முதல்-மந்திரிகள் மாநாடு டெல்லியில் நடந்தது. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை சட்ட மந்திரி கே.பி.முனுசாமி வாசித்தார். உரைவிவரம் வருமாறு:-

போலீஸ் துறையை சீரமைப்பது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் எனக் கருதுகிறேன்.

அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிகாரங்கள் பகிர்வு சமநிலையில் இருக்க வேண்டும் ஆனால் மாநிலங்கள் மீது மத்திய அரசு அக்கறை இல்லாமல் செயல்படுவதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை பராமரிப்பதிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து விதமான குற்றங்களையும் ஒடுக்க கடுமையான, பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அப்பாவி மக்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அமைதியான மாநிலமாக நிலவ, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது. பல மாநிலங்களில் ஜாதி கலவரம், கலவர அச்சுறுத்தல் போன்றவை உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவற்றை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் உளவுத்துறை மூலம் தகவல்களை திரட்டி முறையாக திட்டமிட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேந்தெடுக்கப்பட்ட அரசானது சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முழு பலத்தோடு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளை மீறி தனி அதிகாரத்தை செலுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். மாநிலங்களில் சட்ட ஒழுங்குகளை காப்பாற உறுதியான நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக நிதி உதவி அதிகம் தேவை, மாநிலத்தில் 750 மக்களுக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலைதான் உள்ளது. போலீசாரை அதிகரிக்கவும், உரிய சாதனங்கள் வாங்கவும், மத்திய அரசு போலீஸ் துறைக்கு அதிக நிதி வழங்க வேண்டும்.

எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு போலீஸ் துறையை சீரமைப்பதில் வேகமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நவீன நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு போலீஸ் பணியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 16.5 சதவீதம் பெண்கள் போலீஸ் துறையில் உள்ளனர். இது நாட்டிலேயே அதிக விகிதாச்சாரம் ஆகும். மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றோம். இதற்காக 13 அம்ச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மூத்த போலீஸ் அதிகாரிகளின் கண்காணிப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவு பெண்கள் கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையாக தண்டனை தரப்பட வேண்டும், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பிரச்சினைகளை தடுக்கவும், சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு போலீஸ் துறைக்கு பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளும் மாநில அரசு எடுத்துள்ளது. சுகாதார காப்பீடு, வீட்டு வசதி, ஊக்க தொகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் மாநிலத்துக்குள் மத்திய அரசு தலையிடுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மாநில அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே இதில் தலையிட வேண்டும், இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதில் மாநில அரசை கேட்காமல் சி.பி.ஐ. தலையிடக்கூடாது, இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மாநில அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே சி.பி.ஐ. வழக்குகளை எடுத்துக் கொள்ளவேண்டும். மாநில சட்ட ஒழுங்குகளை காப்பாற்ற அனைத்து வகைகளிலும், மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசு தங்கள் திட்டங்களை மாநிலத்துக்குள் திணிக்க முயற்சிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif
  • idhayam.gif
                   

    No comments:

    Post a Comment