Thursday, April 11, 2013

புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை கோதாபய ராஜபக்ஷேவே நடத்தலாம்: ஹரிஹரன்!

Thursday, April 11, 2013
சென்னை::புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷேவே நடத்தலாம் என்று கூறுகிறார் இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த  ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன்
 
இலங்கையின் இறுதிப்போரின் போது நடந்த போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரும் சர்வதேச நாடுகள், அப்படியானதொரு விசாரணையை, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு  புலிகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து துவங்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கோதாபயவின் இந்த கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அரசு மீது அதிகரித்துவரும் அழுத்தங்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஹரிஹரன்.
 
புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாமல், இலங்கையின் வேறுபல தமிழ்ப் போராளி குழுக்களுக்கும்கூட 1980களில் இந்திய அரசு பயிற்சியளித்ததாக தெரிவித்த ஹரிஹரன், அந்த பிரச்சனையெல்லாம் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்.
 
ஆனால் இப்போது சர்வதேச சமூகமும், ஐநா மன்றமும் கோருவது 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவேண்டும் என்று தானே தவிர, 25 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன விவகாரங்களை அல்ல என்று கூறிய ஹரிஹரன், அவற்றை விசாரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே கோத்தாபய ராஜபக்ஷே விரும்பினால் ஐநாவிடம் அதற்கான கோரிக்கையை முறையாக வைக்கலாம் என்றும், ஒருவேளை ஐநாவோ சர்வதேச நாடுகளோ இதை விசாரிக்க மறுத்தால், இலங்கை அரசாங்கமே அப்படியானதொரு விசாரணையை நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment