Sunday, April 7, 2013

இலங்கை ராணுவம் கைது செய்த காரைக்கால் மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்: மத்திய மந்திரி நாராயணசாமி உறுதி!

Sunday, April 07, 2013
புதுச்சேரி::காரைக்கால் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடித்தபோது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 5 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 26 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மினவர்களை மீட்க வேண்டும் என அவர்கள் புதுவை அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் ஆகியோருக்கு காரைக்கால் மீனவர்களை மீட்டு தருமாறு கோரி கடிதம் எழுதி உள்ளனர். இதனிடையே டெல்லியில் உள்ள மத்திய மந்திரி நாராயணசாமியும் சிறைபிடிக்கப்பட்ட மினவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்கள் 5 படகுகளில் யாழ்பாணம் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை காரைக்கால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் பொருப்பாளர் பாஸ்கர், மீனவர் பேரவை தலைவர் இளங்கோ ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரை டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் இலங்கை வெளியுறவு துறை செயலாளரை தொடர்பு கொண்டு பேசி காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்ற தகவலும் தெரியவந்தது. உடனடியாக காரைக்கால் மீனவர்களை மீட்குமாறு இந்திய தூதரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் துணை தூதர் மோகனை நேரடியாக யாழ்ப்பானம் பகுதிக்கு அனுப்பி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி அளித்தனர்.

ஏற்கனவே தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே சகஜமான சூழல் இல்லை. அதுமட்டுமல்லாமல் கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்பட வில்லை.

தமிழக-புதுவை மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு புனர்வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். அதேவேலையில் இலங்கையில் உள்ள தமிழ் இன மீனவர்களே நமது மீனவர்களுக்கு எதிராக புகார் அளித்து வருகின்றனர். நம்முடைய மீனவர்களின் ஆதரவை பொருட்படுத்தாது நம் மீனவர்கள் மீது குறிவைக்கின்றனர். இருப்பினும், வெகுவிரைவில் கைது செய்யப்பட்ட 26 காரைக்கால் மீனவர்கள் மீட்கப்படுவார்கள்.

மத்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித்தை இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டில் சந்திக்க உள்ளேன். அப்போது இலங்கை சிறையில் உள்ள கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். வெகுவிரைவில் நல்ல செய்தி வரும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

No comments:

Post a Comment