Monday, April 29, 2013

ஒடிசாவில் ஏவுகணை சோதனை தளம் அருகே ராணுவ கிடங்கில் திடீர் தீ விபத்து: ராக்கெட் குண்டுகள் வெடித்து சிதறின!

Monday, April 29, 2013
பாலாசூர்::ஒடிசா மாநிலம் சந்திபூர் ஏவுகணை சோதனை தளம் அருகே உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வெடிபொருள் சோதனை கிடங்கில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ராக்கெட் குண்டுகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள சந்திபூரில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஏவுகணை சோதனை தளம் உள்ளது. அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் இங்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள், சிறிய ராக்கெட் லாஞ்சர் மூலமாக ஏவப்படும் ராக்கெட் குண்டுகளும் இங்கு சோதனை செய்யப்படுகிறது. இந்த குண்டுகள் ஏவுகணை தளத்துக்கு சற்று தூரத்தில் உள்ள நிலத்தடி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த கிடங்கில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இதில் ராக்கெட் குண்டுகள் வெடித்து சிதறின. இதை தொடர்ந்து ஏவுகணை தளத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஏவுகணை தளத்தை நோக்கி செல்லும் பாதைகள் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் உள்ள மற்ற மையங்களுக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறித்து தகவல் எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை.

No comments:

Post a Comment