Tuesday, April 23, 2013

காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளில் 168 தீவிரவாதிகள் சுட்டு கொலை!

Tuesday, April 23, 2013
புதுடெல்லி::ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கோட்டுக்கு அருகிலும், மாநிலத்துக்கு உள்ளேயும் கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 168 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் நேற்று தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் அவர்கள் மீதான துப்பாக்கி சூடு குறித்து மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இவர்களுக்கு ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி எழுத்துமூலமாக பதில் அளித்தார். அதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 168 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தோணி அளித்த பதில்:

கடந்த 2012ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் 73 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கொல்லப்பட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு 95 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லை பகுதியில் பனி அதிகம் விழும் காலங்களில் முகாம்கள் காலி செய்யப்படும். பனிப்பொழிவு குறைந்த பின்னர் மீண்டும் முகாம்கள் செயல்பட துவங்கும். முகாம்கள் காலி செய்யப்படும் காலங்களில் ஹெலிகாப்டர் மூலமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாம்களில் ஆள் இல்லாத போது அவற்றை தீவிரவாதிகள் கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள். ஏரியல் கண்காணிப்பு வாயிலாக அவர்களது முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
 இவ்வாறு அந்தோணி கூறினார்.

No comments:

Post a Comment