Thursday, March 28, 2013

கணவரை பார்க்க அனுமதி மறுப்பு : குழந்தைகளுடன் பெண் விடிய விடிய தர்ணா ; பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு!

Thursday, March 28, 2013
பூந்தமல்லி::கணவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமில் பெண், குழந்தைகளுடன் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த ஜெயமோகன், சந்திரகுமார், பகிரதன், கங்காதரன் ஆகியோர் ஒரு ஆண்டுக்கு மேலாக உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக, ரூ.70 உணவுப்படியை ரூ.150ஆக உயர்த்தக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கடந்த வாரம் சந்திரகுமாரின் மனைவி ஜெயநந்தினி கணவனை பார்க்க வந்தார். அவரை போலீசார் அனுமதித்தனர்.

பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஜெயநந்தினியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வெளியேற்றினர். இந்நிலையில், நேற்று மதியம் ஜெயநந்தினி மீண்டும் சந்திரகுமாரை பார்க்க குழந்தைகளுடன் வந்தார். அவரை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயநந்தினி, சிறப்பு முகாமின் முன் சாலையோரத்தில், அனுமதி வழங்கும் வரை போகமாட்டேன் எனக்கூறி உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, ஜெயநந்தினியின் கோரிக்கைக்கு அனுமதி பெற பூந்தமல்லி தாசில்தார் ராஜேந்திரன், கலெக்டர் அலுவலகம் சென்றார். சந்திரகுமாரை பார்க்க ஜெயநந்தினிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஜெயநந்தினி கணவரை பார்க்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறி அங்கேயே குழந்தைகளுடன் படுத்து தூங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து ஜெயநந்தினி இன்று காலை மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளார்.

No comments:

Post a Comment