பிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர்கள் சிலரை நாட்டிற்கு திருப்பியனுப்புவதை லண்டன் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
இந்தக் குழுவினரை இன்று இலங்கைக்கு திருப்பியனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காக நேரிடலாம் என இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
லண்டன் மேல் நீதிமன்றம் இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததையடுத்து, பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் தொடர்ந்தும் அந்த நாட்டில் தங்கியிருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அத்துடன், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளும் பிரித்தானியாவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, லண்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தையடுத்து தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் BBC உலக சேவைக்கு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு தாக்கல் செய்வதற்கு எண்ணியுள்ளதாகவும் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment