Tuesday, January 29, 2013
இலங்கை::எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலமாகும். அதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை தற்போது அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சட்டம் நீதித்துறை வீழ்ச்சி கண்டுள்ளதாக பெய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காகவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து யுத்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை விசாரிப்பது சுயாதீனமாக அமையாது எனவே சர்வதேச விசாரணை தேவையென வலியுறுத்துவதே இச் சதியின் பின்னணியாகும்.
இது போன்ற பல்வேறு இலக்குகளை இலக்கு வைத்து தாக்குவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அத்தோடு இவற்றை பயன்படுத்தி நாட்டு மக்கள் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்த இங்கு சில சக்திகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.வில் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளது.
இப் பிரேரணைக்கமைய செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கைக்கு எதிராக சர்வதேச வழக்கு தொடங்கும் காலம் 2015 இல் ஏற்படும்.
அதாவது சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கக்கூடாது என்பதே அமெரிக்காவின் திட்டமாகும். அதன் பின்னர் தம்மால் ஆட்டுவிக்கக்கூடிய பொம்மை ஆட்சியை இலங்கையில் ஏற்படுத்தி எமது படையினரை சர்வதேச நீதிமன்றக் கூட்டில் ஏற்றுவதே திட்டமாகும் என்றார்.
No comments:
Post a Comment