Friday, December 14, 2012
இலங்கை::வடமாகாணத்தில் கடற்றொழில்துறையை வளர்த்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
வடமாகாணத்தில் கடற்றொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் 25 பட்டதாரிகளை கடற்றொழில் பரிசோதகர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள ஜஸ்தொழிற்சாலையை இன்றையதினம் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தினதும், வடமாகாணத்தினதும் கடற்றொழில் துறைசார்ந்தவர்களது மேம்பாட்டிற்காக எமது அமைச்சு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஐஸ் தொழிற்சாலை இயங்கவுள்ளது என்றும் இது இங்குள்ள கடற்றொழிலாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்குமென்றும் தெரிவித்தார்.
இந்நிலையத்தினூடாக நாளொன்று 35 மெற்றிக் தொன் ஐஸ் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் முன்னைய காலங்களைவிட இனிவரும் காலங்களில் குறைந்த செலவில் ஐஸைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினூடாக கடற்றொழில்துறை மென்மேலும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் யாழ்.பல்கலைக்கழகத்தினூடாக 25 பட்டதாரிகளை பரிசோதகர்களாக நியமித்து வடமாகாணத்தில் பணிக்கமர்த்தவுள்ளதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
இதன்போது யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும், விரிவாக எடுத்து விளக்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தமது அமைச்சினூடாக யாழ்.மாவட்டத்தில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தமிழ்மக்களுக்கு அரசியல் உரிமை பிரச்சினை தொடர்பிலும் குரல் கொடுத்து வருபவர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இந்திய கடற்றொழிலாளர்களது பிரச்சினை தொடர்பில் விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென உறுதிபடத் தெரிவித்தார்.
முன்பதாக மங்கள வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்ட அமைச்சர்கள் நிகழ்விடத்தில் மங்களவிளக்கேற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், ஒவ்வொரு தொகுதியையும் பார்வையிட்டனர்.
ஐஸ் கூட்டுத்தாபனமாக இயங்கிவந்த மேற்படி நிறுவனம் இன்றுமுதல் கொம்பனியாக இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (LANKA NORTH ICE CO (PVT) LTD) டுவுனு) இது போன்ற ஐஸ் கொம்பனிகள் ஏற்கனவே நாட்டின் பலபகுதிகளிலும் இயங்கி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் மேற்படி கொம்பனி 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும், கடற்றொழில் திணைக்களத்தினதும் அதிகாரிகள் உட்பட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment