Thursday, December 13, 2012
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக் குழுவின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான சுயாதீனக் குழுவினை, தெரிவுக் குழு மீதான நம்பிக்கை இல்லாத நிலையில் நியமிக்கவில்லை என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர், சுயாதீன குழு ஒன்று தொடர்பில் ஆலோசிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
சாதாரணமாக ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்று கிடைக்கப்பெறும் பட்சத்தில், அதனை மீளாய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும்.
இந்த அடிப்படையிலேயே இந்த அறிக்கை தொடர்பிலும் சுயாதீன குழு நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை ரத்து செய்யுமாறு கோரி, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தமக்கு தொலைபேசியில் அழுத்தம் வழங்கியதாக கூறப்படும் செய்தியையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் யாப்புக்கு அமையவே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்காலிகமாக பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஊடகபிரதானிகள் இதன் போது கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி சட்ட ரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment