Thursday, November 1, 2012

கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொன்ற மனோகரனுக்கு தூக்குத்தண்டனை!

Thursday, November 01, 2012
கோவை::கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகள் முஸ்கின் (வயது 11), மகன் ரித்திக் (8). பள்ளிக்குச் சென்ற இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி கால்டாக்சியில் கடத்திச் செல்லப்பட்டனர். முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் குழந்தைகள் இருவரும் பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளி கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக கால்டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ், அவனது நண்பன் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற மோகன்ராஜ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டான். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 47 பேர் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.

எதிர்தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறையில் உள்ள மனோகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். அப்போது மனோகரன் குற்றவாளி என்று நீதிபதி சுப்பிரமணியம் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இன்று (1-ந்தேதி) தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி இன்று வழங்கப்படும் தீர்ப்பை அறிய காலை முதலே கோர்ட்டு முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஏராளமான வக்கீல்களும் அங்கு நின்றதை பார்க்க முடிந்தது. இதையொட்டி பாதுகாப்புக்காக போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு மணி வரை மனோகரனை போலீசார் கோர்ட்டுக்கு கொண்டு வரவில்லை.

இந்நிலையில் இன்று பிற்பகலில் மனோகரன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டான். அதன்பின்னர் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அப்போது குழந்தைகளை கடத்தி கொலை செய்த மனோகரனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
27-7-12_findyour_INNER_468x60.gif

No comments:

Post a Comment