Wednesday, October 31, 2012
இலங்கை::அமெரிக்காவைத் தாக்கியுள்ள சாண்டி புயலால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் சாண்டி புயல் அங்குள்ள கிழக்கு கடலோரப் பகுதியை நாசப்படுத்தியுள்ளது. இந்த புயலால் 15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சாண்டி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 130 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது, பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. சுமார் 14 அடி உயரத்திற்கு அலை எழும்பியதால் கடல் நீர், நகரங்களுக்குள் புகுந்தது.
சாண்டி புயலால் நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலாண்ட் உள்பட 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் வாஷிங்டன், பால்ட்டிமோர், பிலடெல்பியா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. புயல் கரையைத் தொட்ட அட்லாண்டிக் சிட்டியில் நிலைமை மிக மோசம்.
சாண்டி புயல் அமெரிக்காவில் இதுவரை 39 பேரை பலி கொண்டுள்ளது. சுமார் 5 கோடி பேரின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் வடகிழக்கு கடலோர நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா உள்பட சுமார் 15 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 125 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, நியூயார்க் பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக செயல்படவில்லை
இதுவரை சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ள சாண்டி புயல், அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் மேலும் பாதிப்பை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க சூறாவளி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் மக்களுக்கு சீரான எரிபொருள் விநியோக சேவையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment