Thursday, August 30, 2012

அணி சேரா மாநாடு தொடக்கம் : ஈரான் தலைவர் கமேனியுடன் மன்மோகன் சிங் ஆலோசனை!

Thursday, August 30, 2012
டெஹ்ரான்::அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் முன்னதாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஈரான் பயங்கர அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நாட்டின் மீது ஐ.நா.வும் அமெரிக்கா உள்பட பல நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளன. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கூடாது என்று மற்ற நாடுகளை அமெரிக்கா நிர்பந்தித்தது. இந்நிலையில் 120 நாடுகள் உறுப்பினராக உள்ள அணி சேரா நாடுகளின் 2 நாள் மாநாடு டெஹ்ரானில் இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது, ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்தது. எனினும், மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்தினால், சர்வதேச அளவில் பல நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஈரானும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 30க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயர் அதிகாரிகள் வந்துள்ளனர்.
அணி சேரா நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பில் தற்போது எகிப்து உள்ளது. இந்த பொறுப்பை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஈரான் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டெஹ்ரானில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை (73), பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். முஸ்லிம் நாட்டு தலைவர்களை தவிர வேறு நாட்டு தலைவர்களை கமேனி மிகமிக அரிதாக சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் மன்மோகனுடனான இந்த சந்திப்பு இருநாட்டு உறவில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாற்பது நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி, நேருவின் கொள்கைகள் குறித்து கமேனி புகழ்ந்து பேசினார். அதற்கு மன்மோகன் நன்றி தெரிவித்து கொண்டார். அணி சேரா நாடுகளின் மாநாட்டை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மாநாட்டில் பங்கேற்க கூடாது என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கேட்டுக் கொண்டன. அதை பொருட்படுத்தாத பான் கி மூன், மாநாட்டில் பங்கேற்றார். இதற்கு இரு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஜிக்மி தின்லே, கம்போடிய பிரதமர் ஹூன் சென் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரம், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து உள்பட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் மற்றும் பிராந்திய சிக்கல்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

சர்தாரியுடன் சிங் சந்திப்பு?
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை நேற்று உறுதி செய்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அணி சேரா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் போது, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்திக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அப்போது கசாப் தூக்கு தண்டனை பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment