
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான ஒழுங்குகளை செய்வோர் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் சொத்துக்களை முடக்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் இந்த சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2006ம் ஆண்டு குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூலனந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிர்காலத்தில் பிணை வழங்க முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் அனுதாப அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமெனவும், இதனால் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தண்டனை தொடர்ந்தும் 3 மாதங்களாக நீடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவிதமான மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது எனவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment